Asianet News TamilAsianet News Tamil

BREAKING : தமிழ்நாட்டில் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு.. புதிய தேதியை அறிவித்த முதல்வர் ஸ்டாலின்..!

மிக்ஜாம் புயல் மழையினால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளி வளாகங்களை சுத்தம் செய்து, வரும் 11.12.2023 (திங்கட்கிழமை) அன்று பள்ளி திறக்கும் நாளில் நல்ல கற்றல் சூழலை உருவாக்கும் விதமாக பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. 

Postponement of Half Yearly Exams in Tamilnadu.. CM Stalin tvk
Author
First Published Dec 10, 2023, 1:52 PM IST

மழை வெள்ளத்தால் 4 மாவட்டங்களில் புத்தகங்கள் சேதமான நிலையில் மாணவர்கள் சிரமப்படுவார்கள் என்பதால், அனைத்து மாவட்டங்களிலும் அரையாண்டுத் தேர்வுகள் 2 நாட்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையின் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மாணவர்களின் நலன் கருதி, தமிழ்நாடு அரசால் பள்ளிகளுக்கு 04.12.2023 முதல் 09.12.2023 வரை விடுமுறை அளிக்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுரைகளின்படி, மிக்ஜாம் புயல் மழையினால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளி வளாகங்களை சுத்தம் செய்து, வரும் 11.12.2023 (திங்கட்கிழமை) அன்று பள்ளி திறக்கும் நாளில் நல்ல கற்றல் சூழலை உருவாக்கும் விதமாக பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. 

இவற்றைக் கண்காணிக்க பள்ளிக் கல்வித் துறையைச் சார்ந்த 17 அதிகாரிகள் 4 மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இப்பணிகளுக்காக சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு தலா 50 இலட்சம் ரூபாயும், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு 40 இலட்சம் ரூபாயும், ஆக மொத்தம் ஒரு கோடியே 90 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இம்மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் தங்களது பாடப்புத்தகம் மற்றும் நோட்டுப்புத்தகம் உள்ளிட்ட உடைமைகளை இழந்த மாணவர்களுக்கு, பள்ளிகள் திறந்தவுடன் பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடை மற்றும் புத்தகப்பை போன்ற பொருட்களை வழங்க நாளை (திங்கள்கிழமை-11.12.2023) மாணவர்களின் தேவைகளைக் கண்டறிந்து, (செவ்வாய்க்கிழமை-12.12.2023) அன்று பாடப்புத்தகம் மற்றும் நோட்டுப் புத்தகம் உள்ளிட்டவை வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், ஏற்கெனவே, 11.12.2023 அன்று அரையாண்டுத் தேர்வுகள் தொடங்க இருக்கும் நிலையில், புத்தகங்கள் இல்லாமல் மாணவர்கள் தேர்வுக்கு படித்து தயாராக முடியாது என்ற நிலையினை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் நாளை திங்கள்கிழமை (11.12.2023) தொடங்கவிருக்கும் தேர்வுகளை புதன்கிழமை (13.12.2023) அன்று தொடங்க வேண்டுமென பள்ளிக் கல்வித் துறைக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. பள்ளிக் கல்வித் துறையால் அரையாண்டுத் தேர்வுகளுக்கான புதிய கால அட்டவணையை வெளியிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்கள்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios