நாகப்பட்டினம்

பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகப்பட்டினத்தில் அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் அஞ்சலகங்கள் டல் அடிக்கின்றன.

அனைத்து இந்திய அஞ்சலக ஊழியர்கள் சங்கம் சார்பில் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி நேற்று அனைத்து இந்திய அஞ்சல் ஊழியர் சங்க நாகப்பட்டினம் கோட்டம் சார்பில் வேலை நிறுத்தப் போராட்டம் நடைப்பெற்றது.

வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடர்ந்து நாகப்பட்டினம் தலைமை அஞ்சல் நிலையம், வெளிப்பாளையம் அஞ்சல் நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அஞ்சல் நிலையம், நாகூர் அஞ்சல் நிலையம் உள்ளிட்ட அஞ்சல் நிலையங்களின் ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் அஞ்சல் நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

மேலும், நாகப்பட்டினம் தலைமை அஞ்சல் நிலையம் முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அஞ்சலக எழுத்தர் சங்க கோட்ட செயலாளர் மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார்.

தபால்காரர்கள் சங்க கோட்டச் செயலாளர் ரவிச்சந்திரன், கிராமப்புற அஞ்சலக ஊழியர் சங்க செயலாளர் சட்டநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராமப்புற அஞ்சலக ஊழியர் சங்க மாநில செயலாளர் தன்ராஜ் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், “ஊரக அஞ்சல் ஊழியர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள குழுவின் சாதகமான பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

ஊரக அஞ்சல் ஊழியர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும்.

அஞ்சலகங்களில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும்.

அஞ்சல் ஊழியர்களுக்கு வாரத்திற்கு ஐந்து நாள் வேலை திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட சாதாரண பணியாளர்களுக்கான ஊதியத்தை உயர்த்த வேண்டும்” என்பன உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகள் குறித்து ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

இதில் அஞ்சலக ஊழியர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.