திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் பல்வேறு கோரிக்கைகளை தலைமை அஞ்சலக அலுவலகம் முன்பு தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்கியுள்ள அஞ்சலக ஊழியர்கள் 4-வது நாளில் பிச்சை எடுக்கும் போராட்டத்தை நடத்தினர்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தலைமை அஞ்சலக அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சலக ஊழியர்கள் நான்காவது நாளாக நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை கடந்த புதன்கிழமை தொடங்கினர்.

“கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழுவை அமல்படுத்த வேண்டும்,

ஓய்வூதியம் வழங்க வேண்டும்,

இலாகா ஊழியர்களுக்கு இணையான சலுகைகளை கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்தப் போராட்டத்தின் நான்காவது நாளான நேற்று ஆரணி தலைமை அஞ்சலக அலுவலகத்தின் கீழ் பணியாற்றும் கிராம அஞ்சலக ஊழியர்கள், அஞ்சலக அலுவலகம் முன்பு பிச்சை எடுக்கும் போராட்டத்தை நடத்தினர்.

இந்தப் போராட்டத்திற்கு அஞ்சலக ஊழியர் சங்கத் தலைவர் பெருமாள் தலைமை வகித்தார். செயலர் முனியன், பொருளாளர் டேவிட், ஆலோசகர் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.