Asianet News TamilAsianet News Tamil

இரயில் மறியலுக்கு போலீஸ் அனுமதி மறுத்ததால் கிராமப்புற தபால் ஊழியர்கள் தர்ணா போராட்டம்...

postal Staff workers Darna protest for police refused train block protest
postal Staff workers Darna protest for police refused train block protest
Author
First Published May 29, 2018, 9:07 AM IST


திருச்சி
 
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் இரயில் மறியலுக்கு முயன்ற கிராமப்புற தபால் ஊழியர்கள் காவலாளர்கள் அனுமதி மறுத்ததால் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

"ஏழாவது ஊதியக்குழுவின் பலன்களை கிராமப்புற தபால் ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும், 

கமலேஷ் சந்திரா கமிட்டியின் அறிக்கையை உடனடியாக அமல்படுத்த வேண்டும்" போன்ற  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய கிராமிய தபால் ஊழியர் சங்கத்தினர் கடந்த 22-ஆம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, திருச்சி கோட்டத்திலும் கிராமப்புற தபால் ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் நீடித்து வருகிறது. இந்த நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி சந்திப்பு இரயில் நிலையத்தில், இரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என அச்சங்கத்தினர் அறிவித்திருந்தனர். 

மேலும், புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், விருத்தாசலம், தஞ்சாவூர், கும்பகோணம், கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட ஊர்களில் இருந்தும் இரயில் மற்றும் வேன் மூலம் கிராமப்புற தபால் ஊழியர்கள் நேற்று திருச்சி சந்திப்பு இரயில் நிலையம் வந்தடைந்தனர்.

அவர்கள் இரயில் நிலையத்தின் வெளிப்பகுதியில் முன் பதிவு மையம் அருகே திரண்டிருந்தனர். இதனால் பாதுகாப்பு பணிக்காக ஏராளமான காவலாளர்கள் குவிக்கப்பட்டனர். 

இந்த நிலையில் போராட்டக்காரர்கள் இரயில் மறியல் செய்வதற்காக இரயில் நிலையத்திற்குள் செல்ல முயன்றனர். அவர்களை காவலாளர்கள் தடுத்து நிறுத்தி, இரயில் மறியல் போராட்டத்திற்கு அனுமதி இல்லை என்றனர். 

மேலும், தலைமை தபால் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் மட்டும் நடத்த அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவித்தனர். இதனால் காவலாளர்கள் தபால் ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

காவலாளர்கள் பேச்சுவார்த்தை நடத்திய பின் சமாதானமடைந்த தபால் ஊழியர்கள் இரயில் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு, பாரதியார் சாலை வழியாக தலைமை தபால் நிலையம் சென்றனர். ஊர்வலத்தின்போது கோரிக்கைகள் தொடர்பாகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர்.

பின்னர், தலைமை தபால் நிலைய வளாகத்தில் தபால் ஊழியர்கள் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களுடன் அங்கு ஏற்கனவே போராட்டத்திற்கு தயாராக இருந்த திருச்சி கோட்ட கிராமப்புற தபால் ஊழியர்களும் இணைந்து கொண்டனர். இதனால் தலைமை தபால் நிலைய வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. 

கோரிக்கைகள் நிறைவேறும் வரை வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என்று போராட்டத்தில் பங்கேற்றவர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios