பேட்டை

பாரதி கண்ட புதுமைப்பெண் என்ற நிலையை அடைய பெண்கள் ஒவ்வொருவரும் மிகுந்த பொறுப்புணர்வோடும், சுயமரியாதையுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்று திரைப்பட இயக்குநரும், நடிகையுமான இலட்சுமிராமகிருஷ்ணன் கூறினார்.

திருநெல்வேலியை அடுத்துள்ள கோபாலசமுத்திரம் கிராம உதயம் சார்பில் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி அலுவலக வளாகத்தில் நடைப்பெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு சமூக ஆர்வாளர் அப்துல்கனி தலைமைத் தாங்கினார். கிராம உதயம் நிர்வாக இயக்குனர் சுந்தரேசன், பொது மேலாளர் தமிழரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலாளர் மகேசுவரி (பொறுப்பு) வரவேற்றார். வக்கீல் புகழேந்தி பகத்சிங், கிளை மேலாளர் வேல்முருகன், ஆறுமுக வடிவு, முருகன், சேகர், பாலசுப்பிரமணியன், மீனாட்சி, ஜெபமணி, ஜெயபார்வதி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

இந்த நிகழ்ச்சியில் மிகச்சிறந்த சேவைகள் செய்த 213 பெண்களுக்கு கிராம உதயம் சார்பில் அப்துல்கலாம் விருதுகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திரைப்பட இயக்குநரும், நடிகையுமான இலட்சுமிராமகிருஷ்ணன் கலந்து கொண்டு, மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சியை குத்துவிளக்கு ஏற்றித் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

“பாரதி கண்ட புதுமைப்பெண் என்ற நிலையை அடைய நீங்கள் ஒவ்வொருவரும் மிகுந்த பொறுப்புணர்வோடும், சுயமரியாதையுடனும் நடந்து கொள்ள வேண்டும்.

குழந்தைகளிடம் புரிந்து கொள்ளும் மனப்பான்மையுடன் பழக கற்றுக்கொள்ள வேண்டும்.

பெண்கள் மன தைரியத்துடன், உடல் தைரியத்தையும் வளர்த்து கொள்ள வேண்டும்.

ஆண், பெண் என பாகுபாடு பார்க்காமல் ஒரே மாதிரியாக குழந்தைகளை வளர்க்க கற்றுக் கொள்ள வேண்டும்.

பெண்கள் அதிக மரக்கன்றுகளை நட்டு சுகாதாரமான வாழ்வாதாரத்தை பேணி பாதுகாத்திட முன்வர வேண்டும்.

பெண்கள் வரலாறு படைக்க வேண்டும். வரலாறாக மாற வேண்டும்” என்று அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், மா, நெல்லி, அசோகம், சீதா, பலா, வேம்பு, கொய்யா, பாதாம், எலுமிச்சை, பாக்கு, மஞ்சள் கொன்றை, மகிலம், சப்போட்டா, மலேசியா தேக்கு, புங்கை உள்ளிட்ட 5000 மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது.

முடிவில் சுசீலா நன்றி கூறினார்.