சென்னையில் நடைபெற்ற வருமானவரி சோதனையில் ரூ.433 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை வருமான வரித்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

கடந்த மாதம் ஜனவரி 29-ம் தேதி தமிழகம் முழுவதும் 74 இடங்களில் வணிக நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனை பெரம்பூரில் உள்ள ரேவதி ஸ்டோருக்கு சொந்தமான நகைக்கடை, ஜவுளிக்கடை, பர்னிச்சர், சூப்பர் மார்கெட் ஆகிய கடைகளிலும், அதேபோல் தி.நகர், பாடி ஆகிய பகுதிகளில் உள்ள சரவணா ஸ்டோர் கடைகள் மற்றும் வீடுகளில் சோதனை நடைபெற்றது. மேலும் ஜி ஸ்கொயர், லோட்டஸ் க்ரூப் ஆகிய இடங்களில் நடைபெற்றது. 

இந்த சோதனை 3 நாட்கள் வரை நீடித்தது. இதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், நகை, பணம் உள்ளிட்டவைகள் நேற்று கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.433 கோடி வரி ஏய்ப்பு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பிரபல ஜவுளி நிறுவனம் உள்ளிட்ட 4 நிறுவனங்களில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் கணக்கில் வராத ரூ.25 கோடி பணம், 12 கிலோ தங்கம், 626 காரட் வைரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது வருமான வரித்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.