Actor Bonda Mani : நகைச்சுவை நடிகர் போண்டா மணி திடீர் மரணம்... திரையுலகினர் அதிர்ச்சி
சிறுநீரக பிரச்சினை காரணமாக சிகிச்சை பெற்று வந்த பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி, நேற்று இரவு தனது வீட்டில் மயக்கமடைந்து கீழே விழுந்த நிலையில் உயிரிழந்தார். அவரது மறைவிற்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
போண்டா மணி காலமானார்
தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகர்கள் ஒன்றன் பின் ஒன்றாக கடந்த சில ஆண்டுகளாக உயிரிழந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி உல்நிலை பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். இலங்கையை பூர்விகமாகக் கொண்ட போண்டா மணி 1991-ம் ஆண்டு வெளியான 'பவுனு பவுனுதான்' என்ற பாக்யராஜ் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து தமிழ் திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை நாடகங்களிலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.
ரசிகர்களை மகிழ்வித்த போண்டா மணி
இவர் நடித்த சுந்தரா டிராவல்ஸ், வின்னர் உள்ளிட்ட படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. வடிவேலு உடன் இவர் சேர்ந்து நடித்திருந்த பல்வேறு நகைச்சுவை காட்சிகள் கவனம் பெற்றன. குறிப்பாக “கண்ணும் கண்ணும்” என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற காமெடி காட்சி ஒன்று ரசிகர்களை ரசிக்க வைத்தது. இந்த காமெடி காட்சியில் போலீஸிடம் தப்பித்து தண்ணீருக்கடியில் ஒளிந்திருக்கும் போண்டா மணி, திடீரென வெளியே வருவார். “என்னைய போலீஸ் தேடிட்டு இருக்கு. அவங்க வந்து கேட்பாங்க, எதுவும் சொல்லிடாதீங்க, அடிச்சிக்கூட கேட்பாங்க அப்பவும் சொல்லிடாதீங்க” என வடிவேலுவிடம் கூறிவிட்டு சென்றுவிடுவார். இந்த காமெடி காட்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
உடல்நிலை பாதிப்பால் மரணம்
ரசிகர்களை தனது நகைச்சுவை திறனால் மகிழ்வித்த போண்டா மணிக்கு கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரக பிரச்சனை ஏற்பட்டது. இதனையடுத்து மருத்துவமனையில் மாதம் ஒருமுறை மருத்துவமனை சென்று டயாலிசிஸ் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் பல்லாவரத்தில் உள்ள வீட்டில் மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து அவரது உறவினர்கள் அவரை அவசர, அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நகைச்சுவை நடிகர் போண்டா மணி மரணம் கேள்விப்பட்ட திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.