Pooja with snake...! The Prohithar arrested
சதாபிரஷேக விழாவில் பாம்பை வைத்து பூஜை செய்த புரோகிதர் ஒருவரை கடலூர் வனத்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவான பாம்பாட்டியை தேடி வருகின்றனர்.
கடலூர், துரைசாமி நகரில் வயதான தம்பதிக்கு சதாபிஷேக விழா சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. தம்பதியர் 80 வயதை கடந்ததற்கான இந்த விழாவில், புரோகிதர் ஒருவர் பாம்பை வைத்து பூஜை செய்துள்ளார். சுமார் 10 நிமிடங்களுக்கு இந்த பூஜை நடைபெற்ற இதனை வீடியோ எடுத்து, வாட்ஸ் அப்-ல் வெளியிட்டுள்ளனர் சிலர்.
வயதான தம்பதியர் மாலை போட்டு நாற்காலியில் அமர்ந்திருப்பார்கள். புரோகிதர் ஒருவர் தரையில் அமர்ந்திருப்பார். அவருக்கு அருகில் நல்ல பாம்பு ஒன்று சுமார் ஒன்றரை அடி உயரத்துக்கு படமெடுத்தபடி நிற்கும்.
அதைச் சுற்றி நிற்கும் உறவினர்கள் அனைவரும் பயந்தபடி பார்த்துக் கொண்டிருப்பார்கள். புரோகிதருக்கு அருகே பாம்பாட்டி மகுடி மற்றும் கூடையுடன் இருப்பார். அவர் பாம்பை கண்காணித்தபடியே இருப்பார்.
நாகராஜாவாக அந்த பாம்பை பாவித்து புரோகிதர் மந்திரம் சொல்வார். மந்திரங்கள் கூறியபடியே, பூக்களை பாம்பின் மீது போட்டிபடி இருப்பார். புரோகிதரை பாம்பு குறிவைக்கும் நேரத்தில், பாம்பாட்டி பாம்பின் கவனத்தை தன் பக்கம் இழுப்பார்.
இதன் பின்னர் புரோகிதர் மீண்டும் பூஜை செய்தபடி பூ, வாழைப்பழம், கமண்டலத்தில் இருட்ககும் நீரை கூடையில் தெளிப்பார். மீண்டும் பாம்பு புரோகிதரை நோக்கி திரும்ப, பாம்பாட்டி தன் கையைக் கொண்டு செல்வார் அப்போது பாம்பு அவரைக் கொத்தும். இதனை உறவினர்கள் கலவரத்துடன் பார்ப்பார்கள்.
உயிருக்கு ஆபத்தான இந்த பூஜை செய்ததைப் பார்த்த சிலர், வீடியோ எடுத்து வனத்துறையினருக்கு அனுப்பி வைத்தனர். இந்த வீடியோ காட்சிகளை வைத்து,
வனத்துறையினர், பாம்பை வைத்து பூஜை செய்த புரோகிதர் யார் என்பது குறித்து விசாரிக்கத் தொடங்கினர். கடலூர் ஆணைக்குப்பம் பகுதியைச் சேர்ந்த புரோகிதர் சுந்தரேசன் (45) என்பது தெரியவந்தது. உடனடியாக அவரை கடலூர் மாவட்ட வனத்துறையினர் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர். பூஜைக்காக நல்ல பாம்பை கொண்டு வந்த பாம்பாட்டியையும் வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
