Asianet News TamilAsianet News Tamil

ஜூனியர் காமராசராக பொன்.ராதாகிருஷ்ணன் திகழ்கிறார் - இயக்குநர் விசு சொல்றாரு...

Pon.Radhakrishnan as Junior Kamarasar - Director visu says
Pon.Radhakrishnan as Junior Kamarasar - Director visu says
Author
First Published Feb 19, 2018, 9:14 AM IST


கன்னியாகுமரி

காமராசருக்கு அடுத்தபடியாக ஜூனியர் காமராசராக பொன்.ராதாகிருஷ்ணன் திகழ்கிறார் என்று நாகர்கோவிலில் வர்த்தக துறைமுகத்துக்கு ஆதரவாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இயக்குநர் விசு தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ.28 ஆயிரம் கோடி செலவில் வர்த்தக துறைமுகம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. முதலில் இனயத்தில் அமைக்க திட்டமிடப்பட்ட இந்த துறைமுகம் கன்னியாகுமரிக்கு இடம் மாற்றப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி அருகே கோவளத்துக்கும் – கீழ மணக்குடிக்கும் இடையே அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த துறைமுகம் அமைக்கக் கூடாது என்று ஒரு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆனால், மற்றொரு தரப்பினர் கன்னியாகுமரிக்கு வர்த்தக துறைமுகம் வேண்டும் என்று கோரி "கன்னியாகுமரி வர்த்தக துறைமுகம் ஆதரவு இயக்கம்" என்ற பெயரில் ஒரு இயக்கத்தை தொடங்கி உள்ளனர்.

இந்த நிலையில் கன்னியாகுமரி வர்த்தக துறைமுகத்துக்கு ஆதரவாகவும், இந்த துறைமுக திட்டத்தை விரைவாக செயல்படுத்த வலியுறுத்தியும் "கன்னியாகுமரி மாவட்ட மக்களின் வாழ்வாதார போராட்டம்" என்ற பெயரில் "கன்னியாகுமரி வர்த்தக துறைமுக ஆதரவு இயக்கம்" சார்பில் நேற்று நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

ஆட்சியர் அலுவலகம் முன் நேற்று பிற்பகலில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு துறைமுக ஆதரவு இயக்க ஒருங்கிணைப்பாளர் வேல்பாண்டியன் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற காவல் துணை கண்காணிப்பாளர் செல்வராஜ் வரவேற்றார்.

பா.ஜனதா மாநில துணைத் தலைவர் எம்.ஆர்.காந்தி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முகம்மது இஸ்மாயில், குமாரதாஸ், ஐயாவழி இயக்க சுவாமி சிவச்சந்திரன், வக்கீல் பாலஜனாதிபதி, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் வெற்றிவேல், நாடார் மகாஜன சங்க தங்கராஜ் நாடார்,

கவிஞர் சதாசிவம், ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஐவர் தேவவரம், துறைமுக ஆதரவு இயக்க இணை ஒருங்கிணைப்பாளர் டி.சி.மகேஷ், மண்டைக்காடு புதூரைச் சேர்ந்த மீனவர் ஜெஸ்டாலின் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திரைப்பட இயக்குனரும், நடிகருமான விசு பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.

அவர் பேசியது: "கன்னியாகுமரி மாவட்டத்தில் விரைவில் அழகான பாலங்களை காணப்போகிற நீங்கள், அழகான துறைமுகத்தையும் நீங்கள் பார்க்கப் போகிறீர்கள்.

உலக வரைபடத்தில் கடலுக்குள் நீண்டு போகும் நாடுகள் மூன்று தான். அதில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் கடலுக்குள் நீண்டு போகும் இடம் ஒன்று தான். அது உங்கள் கன்னியாகுமரி.

கன்னியாகுமரியின் மேற்கிலும், கிழக்கிலும் கடல் இருக்கிறது. இந்த கடல் சார்ந்த வியாபாரங்கள் துறைமுகம் மூலமாகத்தான் நடக்கும். அப்படி நடந்தாக வேண்டும் என்றால் கட்டாயம் துறைமுகம் வந்தாக வேண்டும்.

துறைமுக திட்டத்துக்கு எதிராக செயல்படுபவர்களை ஜெயிலில் தூக்கி போடவேண்டும். அதற்கு தமிழக அரசு தைரியம் இழந்து நிற்கிறது. அந்த தைரியத்தை தமிழக அரசுக்கு நாம்தான் கொண்டுவர வேண்டும்.

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராகவும் இதேபோல் போராட்டம் நடத்தினார்கள். அந்த போராட்டம் என்ன ஆனது? கூடங்குளம் தற்போது குட்டி சிங்கப்பூர் போல் ஆகிவிட்டது. கூடங்குளம் அப்படி ஆனால் கன்னியாகுமரியும் அப்படி ஆக வாய்ப்புள்ளது.

உங்களைப் போல இளைஞர்களால் கட்டாயம் துறைமுகத்தை கொண்டுவர முடியும். சல்லிக்கட்டு போராட்டத்தில் எந்த அளவு உணர்வும், உணர்ச்சியும் இருந்ததோ அதை நான் இங்கு பார்க்கிறேன்.

காமராசருக்கு அடுத்தபடியாக ஜூனியர் காமராசராக பொன்.ராதாகிருஷ்ணன் திகழ்கிறார். இவரைப்போன்ற அரசியல்வாதியை பார்க்க முடியாது. அவருக்காகத்தான் என் உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் நான் இங்கு வந்திருக்கிறேன். கன்னியாகுமரி துறைமுகம் அமைந்தால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்" என்று விசு பேசினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios