மனோ தங்கராஜ் பால்வளத்துறை அமைச்சரா..? இல்லை பொய்வளத்துறை அமைச்சரா.? பால் முகவர்கள் கேள்வி
கடந்தாண்டை விட தற்போது 23%, 25% ஆவின் பால் விற்பனை அதிகரித்துள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் எப்படி மாற்றி, மாற்றி கதையளக்கிறார் எனத் தெரியவில்லை பால் முகவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அமைச்சரின் மாறுபட்ட தகவல்
ஆவின் பால் விற்பனை தொடர்பாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறிய தகவலுக்கு மறுப்பு தெரிவித்து பால்முகவர்கள் சங்க தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆவின் பால் விற்பனை தொடர்பாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் தொடர்ந்து தவறான, முன்னுக்குப்பின் முரணான புள்ளி விவரங்களையும் தெரிவித்து வருவது "கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள்" என்கிற பழமொழியை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது. ஏனெனில் கடந்த ஜூன் 19ம் தேதி சென்னை, நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமை அலுவலகத்தில் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்களுடனான கலந்தாய்வு கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது "ஆவின் பால் விற்பனை கடந்த ஆண்டை விட 23% அதிகரித்துள்ளதாக தெரிவித்திருந்தார்."
Bussy Anand Vijay : விறகுக்கடை முதலாளியாக இருந்த புஸ்ஸி ஆனந்த் விஜய்யின் தளபதியாக மாறியது எப்படி?
ஆவின் பால் விற்பனை நிலை என்ன.?
அதன் பிறகு கடந்த ஜூன்-22ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்ற பால் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது அவர் தாக்கல் செய்த அரசின் கொள்கை விளக்க குறிப்பிலோ கடைசி இரண்டாண்டுகளில் ஆவின் பால் விற்பனை 3.45% அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த சூழலில் கடந்த ஜூன் 29ம் தேதி கோவையில் பால்வளத்துறை அதிகாரிகளோடு நடத்திய ஆலோசனை கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் "கடந்த ஆண்டை விட ஆவின் பால் விற்பனை 25% அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்." கடந்த 11நாட்களுக்குள் ஆவின் பால் விற்பனை உயர்வு தொடர்பாக மூன்றுவிதமான, முன்னுக்குப்பின் முரணான புள்ளி விவரங்களை தெரிவித்து மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசுக்கு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் திட்டமிட்டு அவப்பெயரை ஏற்படுத்தி வருகிறாரோ..?
பால் விற்பனை அதிகரிப்பா.?
அல்லது "சொல்வதைச் அப்படியே திரும்பச் சொல்லும் கிளிப்பிள்ளை" அதிகாரிகள் எழுதிக் கொடுக்கும் புள்ளி விவரங்களை ஆய்வு செய்யாமல் அப்படியே ஒப்பிக்கிறாரோ..? என்கிற சந்தேகம் எழுகிறது. கடந்த 2023-2024 (29.13லட்சம் லிட்டர்) - 2024-2025ம் (30.25லட்சம் லிட்டர்) நிதியாண்டுகளோடு ஒப்பிடுகையில் வெறும் 3.54% தான் ஆவின் பால் விற்பனை அதிகரித்துள்ள உண்மை தெரிய வருகிறது. அப்படியானால் கடந்தாண்டை விட தற்போது 23%, 25% ஆவின் பால் விற்பனை அதிகரித்துள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் எப்படி மாற்றி, மாற்றி கதையளக்கிறார் எனத் தெரியவில்லை..?
அதுமட்டுமின்றி மனோ தங்கராஜ் அவர்கள் கடந்தாண்டு பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட சில மாதங்களில் ஆவினுக்கான தினசரி பால் கொள்முதலை 40லட்சம் லிட்டராகவும், பால் கையாளும் திறனை 70லட்சம் லிட்டராக உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆனால் மனோ தங்கராஜ் அவர்கள் பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்று 14மாதங்கள் கடந்த நிலையில் அவர் கூறியபடி ஆவினுக்கான பால் கொள்முதலை அதிகரிக்கவோ, பாலினை கையாளும் திறன் அளவை உயர்த்தவோ அப்படி எந்த ஒரு பெரிய நடவடிக்கையும் எடுக்கவில்லை
திமுக செய்தி தொடர்பாளராக செயல்படுங்க..
பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் இனிமேலாவது தான் சார்ந்த பால்வளத்துறைக்கும், ஆவினுக்கும் 100% உண்மையாக, ஆக்கபூர்வமாக செயல்படுமாறு வலியுறுத்துவதோடு, அவ்வாறு செயல்பட முடியவில்லை என்றால் மனோ தங்கராஜ் அவர்கள் மக்களின் வரப்பணத்தை வீணடிக்காமல் தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு முழுநேரமாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் செய்தித் தொடர்பாளராக செயல்பட்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என பால்முகவர் சங்க தலைவர் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.