பொங்கல் திருநாளை முன்னிட்டு கூட்டுறவு நியாய விலைக்கடைகள் மூலம் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் இலவச பொங்கல் பொருள்கள் இன்று முதல் முதல் விநியோகம் செய்யப்படுகின்றன. இதற்காக அனைத்து ரேஷன் கடைகளுக்கும், பொருட்கள் நேற்று கொண்டு சேர்க்கப்பட்டன.

பொங்கலை பண்டிகைக்கு இலவச பொருள்களை ஆண்டுதோறும் தமிழக அரசு வழங்கி வருகிறது. அதேபோல், இந்தாண்டுக்கான 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, தலா 20 கிராம் முந்திரி-திராட்சை, 5 கிராம் ஏலக்காய், 2 அடி நீள கரும்புதுண்டு ஆகியவை வழங்கப்படுகிறது.

ஏற்கெனவே தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் நேற்று அனைத்து ரேஷன் கடைகளுக்கும் வழங்கப்பட்டன. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

பொங்கல் பொருட்களை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் அரிசி, சர்க்கரை மட்டுமே தயாராக உள்ளது. மற்ற பொருள்களான முந்திரி, திராட்சை, ஏலக்காய், கரும்பு ஆகியவை வெளிச்சந்தையில் வாங்கிக் கொள்ளும் வகையில் நிதியும் வழங்கியுள்ளது.

இதுவரையில் தரமான கரும்புகள் கிடைக்காத நிலையே உள்ளது. அதனால், அதுவும் குறிப்பிட்ட நாளுக்குள் வாங்கி அனைத்து பொருள்களும் வழங்கப்பட உள்ளது. இதேபோல் இலவச வேட்டி, சேலையும் வருவாய்த் துறை அதிகாரிகளால் ரேஷன் கடைகளில் இன்று விநியோகம் செய்யப்படுகிறது என்றனர்.

இதற்கிடையில், ரேஷன் கடைகளில் பொங்கல் பொருட்கள் வழங்கப்பட இருப்பதை அறிந்ததும், இன்று காலை சுமார் 6 மணி முதல் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க தொடங்கிவிட்டனர்.