சென்னை கோயம்பேட்டில் பொங்கல் பண்டிகை பேருந்துகளுக்கான முன்பதிவு சிறப்பு கவுன்ட்டர்களை போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் விஜயபாஸ்கர்;- பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 11-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை 24,708 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து 14,263 பேருந்துகள் இயக்கப்படுவதால் அவற்றில் முன்பதிவு செய்வதற்கு வசதியாக மையங்கள் இன்று திறக்கப்பட்டுள்ளன. 

கோயம்பேட்டில் 26 கவுண்ட்டர்களும், தாம்பரம் சானிடோரியத்தில் 2 கவுண்ட்டர்களும், பூந்தமல்லி, மாதவரம் ஆகிய இடங்களில் தலா ஒன்று என 30 சிறப்பு முன்பதிவு மையங்கள் இன்று முதல் செயல்படுத்தப்படுகிறது. 

பயணிகளுக்கு வசதியாக 5 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லி, மாதவரம், கே.கே.நகர், சானிடோரியம் ஆகிய இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கோயம்பேட்டிலிருந்து புறப்படும் பேருந்துகள் பெருங்களத்தூர் செல்லாமல் ஊரப்பாக்கம் வழியாக செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. 

தற்காலி பேருந்து நிலையங்களின் விவரம்..

* ஆந்திரா மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும். 

* வேலூர், ஆரணி, குடியாத்தம், ஆற்காடு, ஆம்பூர், கிருஷ்ணகிரி, ஒசூர் செல்லும் பேருந்துகள் பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகிறது.

* கடலூர், புதுச்சேரி செல்லும் பேருந்துகள் கே.கே.நகர். பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

* திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகிறது.

* தஞ்சாவூர், கும்பகோணம், விழுப்புரம் செல்லும் பேருந்துகள் சானிடோரிய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகிறது.

* சேலம், கோவை மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்தும் இயக்கப்படுகிறது. கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது, சிறப்புப் பேருந்துகளில் பயணம் செய்ய 2.40 லட்சம் பேர் முன்பதிவு செய்திருந்தனர். மொத்தம் 4.92 லட்சம் பேர் சிறப்புப் பேருந்துகளில் பயணம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.