சர்க்கரை கார்டுகளை வைத்திருப்பவர்களுக்கும் பொங்கல் பரிசாக 1000 ரூபாய் வழங்க உயர்நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதார்களுக்கும் பொங்கல் பரிசு மற்றும் 1000 ரூபாய் ரொக்கம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு தொகை ரேஷன் கடைகளில் திங்கட்கிழமை முதல் ரொக்கமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொங்கல் பரிசுத் தொகை வழங்குவதை நிறுத்தி வைக்க உத்தரவிடவேண்டும் என கோவையைச் சேர்ந்த டேனியல் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். இதனையடுத்து பொங்கல் பரிசாக 1000 ரூபாய் வழங்கக் கூடாது. வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு வழங்க வேண்டும்’’ என உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதனைத் தொடர்ந்து பொங்கல் பரிசுடன் ரூ.1,000 வழங்குவதற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் நேற்று மேல்முறையீடு செய்தது. தமிழக அரசின் முறையீட்டை மனுவாக கொடுத்தால் விசாரிக்கப்படும் என உயர்நீதிமன்றம் கூறியது.

இதனையடுத்து மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது தமிழக அரசு. அதில், சர்க்கரை மட்டும் வாங்கும் குடும்ப அட்டைகளுக்கு அதாவது (NPHHS) கார்டுகளுக்கு விதிவிலக்கு அளிக்கவேண்டும். அந்த கார்டு வைத்திருப்பவர்களும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள்தான்’ என தமிழக அரசு கூறியிருந்தது. இந்நிலையில் சர்க்கரை வாங்கும் ரேஷன் அட்டைகளுக்கும் அதாவது (NPHHS) பொங்கல் பரிசு பொருட்கள் வழங்க உத்தரவிட்டுள்ளது. அதேவேளை ’எத்தனை நாளைக்குத்தான் இலவசங்களை வழங்குவீர்கள்’ என தமிழக அரசை நீதிபதிகள் கடிந்து கொண்டுள்ளனர். சர்க்கரை கார்டுகளை வைத்திருப்பவர்கள் ரேஷன் கடைக்கு சென்று பணம் பெறாமல் திரும்பினர். இப்போது மீண்டும் அவர்கள் சென்றால் 1000 ரூபாயை உறுதியாக பெற்றுத் திரும்பலாம்.