சர்க்கரை கார்டு வைத்திருப்பவர்களுக்காவது பொங்கல் பரிசாக 1000 ரூபாய் கொடுக்க அனுமதிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது.

 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதார்களுக்கும் பொங்கல் பரிசு மற்றும் 1000 ரூபாய் ரொக்கம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு தொகை ரேஷன் கடைகளில் திங்கட்கிழமை முதல் ரொக்கமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொங்கல் பரிசுத் தொகை வழங்குவதை நிறுத்தி வைக்க உத்தரவிடவேண்டும் என கோவையைச் சேர்ந்த டேனியல் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். இதனையடுத்து பொங்கல் பரிசாக 1000 ரூபாய் வழங்கக் கூடாது. வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு வழங்க வேண்டும்’’ என உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

இதனைத் தொடர்ந்து பொங்கல் பரிசுடன் ரூ.1,000 வழங்குவதற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு செய்தது. தமிழக அரசின் முறையீட்டை மனுவாக கொடுத்தால் விசாரிக்கப்படும் என உயர்நீதிமன்றம் கூறியது.

இதனையடுத்து மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது தமிழக அரசு. அதில், சர்க்கரை மட்டும் வாங்கும் குடும்ப அட்டைகளுக்கு அதாவது (NPHHS) கார்டுகளுக்கு விதிவிலக்கு அளிக்கவேண்டும். அந்த கார்டு வைத்திருப்பவர்களும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள்தான்’ என கூறியிருக்கிறது தமிழக அரசு.