திருச்சி

திருச்சி மாவட்டத்தில் 2 லட்சத்து 68 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முதல் கட்டமாக வழங்கப்பட்டது.

போலியோ இளம்பிள்ளை வாத நோயை இல்லாமல் செய்ய ஐந்து வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவசமாக போலியோ சொட்டுமருந்து வழங்கப்பட்டு வருகிறது.

திருச்சி மாவட்டம், திருவரங்கம் புலிமண்டபசாலையில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நேற்று போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் அமைக்கப்பட்டு இருந்தது.

இந்த முகாமில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமினை தொடங்கி வைத்தனர். இதற்கு மாவட்ட ஆட்சியர் ராஜாமணி தலைமை வகித்தார்.

உலக சுகாதார நிறுவனம் மத்திய மற்றும் மாநில அரசின் உதவியுடன் திருச்சி மாவட்டத்தில் முதல் கட்டமாக கிராமப்புறங்களில் 1378 மையங்களிலும், திருச்சி மாநகராட்சி பகுதியில் 267 மையங்களிலும், துறையூர் நகராட்சியில் 21 மையங்களிலும், மணப்பாறை நகராட்சியில் 27 மையங்களிலும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

இரண்டாம் கட்டமாக வருகிற மார்ச் மாதம் 11-ஆம் தேதி, பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.

திருவரங்கம், குணசீலம், சமயபுரம், வயலூர் ஆகிய கோவில்கள், மசூதிகள் தேவாலயங்கள் மற்றும் திருச்சி மத்திய பஸ் நிலையம், சத்திரம் பேருந்து நிலையங்கள், திருச்சி சந்திப்பு, நகர, கோட்டை, திருவரங்கம் இரயில் நிலையங்கள், விமான நிலையம், முக்கொம்பு உள்ளிட்ட சுற்றுலாதலங்கள் ஆகிய அனைத்து இடங்களிலும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

மேலும், 69 நடமாடும் குழுக்கள் மூலமாகவும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. திருச்சி வழியாக சென்ற அனைத்து இரயில்களிலும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

திருச்சி மாவட்டம் முழுவதும் முதல் கட்டமாக மொத்தம் 2 இலட்சத்து 68 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.