ஈரோட்டில் நேற்று மாலை பெய்த கடும் மழையையும் பொருட்படுத்தாது, போக்குவரத்து காவலர் ஒருவர் நனைந்த படியே, பள்ளிவிட்டு  செல்லும் மாணவர்களை ஒழுங்குபடுத்தி பாதுகாப்பு அளித்தது அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. பொது மக்கள், விவசாயிகள் இடையே இந்த மழை பொழிவு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு நகரில் நேற்று மாலை ஈரோடு – கோவை சாலையில் போக்குவரத்து காவலர் ஒருவர் போக்குவரத்தை கண்காணித்துக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென மழை கொட்டத் தொடங்கியது. அதே நேரத்தில் அந்த சாலையில் அங்கிருந்த அரசு பள்ளி ஒன்று முடிந்து மாணவ-மாணவிகள்  தொடர்ந்து  சாலையை கடக்கத் தொடங்கினார்.

கனமழை பெய்துகொண்டிருந்த போதும் முக்கிய சாலை என்பதால் பேருந்துகளும், லாரிகளும் சாலையில் போய்க்கொண்டிருந்தன. அதே நேரத்தில் மாணவர்களும் ரோடை கிராஸ் பண்ணியதால் அதிர்ச்சி அடைந்த அந்த போக்குவரத்து காவலர் கொட்டும் மழையை பொருட்படுத்தாது சாலையில் இறங்கி போக்குவரத்தை சீர் செய்யத் தொடங்கினார்.

அனைத்து மாணவர்களும் பத்திரமாக ரோடை கிராஸ் பண்ணும் வரை அந்த காவலர் மழையில் நனைந்தபடியே அவர்களுக்கு பாதுகாப்பாக செயல் பட்டார். போக்குவரத்து காவலரின் இந்த செயல் அங்கிருந்த பொது மக்களை நெகிழ்ச்சி கொள்ளச் செய்தது.