ஈரோடு
இரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஈரோடு இரயில் நிலையத்தில் பாதுகாப்புக்காகவும், அசாம்பாவிதம் நடக்காமல் தடுக்கவும் ஏராளமான காவலாளர்கள் காத்திருந்தனர். அறிவித்தது போல, இரயில் மறியலில் ஈடுபட வந்த விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சிகளை சேர்ந்த 47 பெண்கள் உள்பட 617 பேர் கைது காவல்துறையால் செய்யப்பட்டனர்.
காவிரி நதிநீர் பிரச்சனையில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மறுத்த மத்திய பா.ஜனதா அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதிநீர் பங்கீட்டு ஒழுங்கு நடவடிக்கை குழுவை உடனடியாக அமைக்க மத்திய அரசை வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டு இயக்கம் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் ஈரோட்டில் திங்கள்கிழமை இரயில் மறியல் போராட்டம் நடைப்பெற்றது.
போராட்டத்திற்கு ஈரோடு மாவட்ட அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பி.காசியண்ணன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க ஒருங்கிணைப்பாளர் பி.கே.தெய்வசிகாமணி முன்னிலை வகித்தார்.
போராட்டக்குழுவினர் காளைமாடு சிலை சந்திப்பு பகுதியில் கூடினார்கள். அங்கிருந்து முழக்கங்கள் எழுப்பியபடி இரயில் நிலையத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.
இந்த ஊர்வலத்தில் தி.மு.க. சார்பில் மாநில துணைப் பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், மாநில நெசவாளர் அணி செயலாளர் சச்சிதானந்தன், மாநில கொள்கை பிரசார அணி துணை செயலாளர் வி.சி.சந்திரகுமார், மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் ஆ.செந்தில்குமார், பொருளாளர் பி.கே.பழனிச்சாமி, முன்னாள் மேயர் குமார் முருகேஸ், கவுன்சிலர் பொ.ராமச்சந்திரன் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில இளைஞர் அணி தலைவர் எம்.யுவராஜா, கட்சியின் மாநில துணைத்தலைவர் ஆறுமுகம், மாவட்ட தலைவர் விஜயகுமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
ம.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான அ.கணேசமூர்த்தி மற்றும் பலரும், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மண்டல அமைப்பு செயலாளர் நா.விநாயகமூர்த்தி மற்றும் பலரும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் பொருளாளர் கே.கே.சி.பாலு, மாநகர செயலாளர் ஜெகநாதன் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தேசியக்குழு உறுப்பினர் த.ஸ்டாலின் குணசேகரன், மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர் மாரிமுத்து, மாநகர செயலாளர் ராஜ்குமார் ஆகியோரும், பெரியார் திராவிடர் கழகம் சார்பில் மண்டல செயலாளர் த.சண்முகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் குமரகுருபரன் உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். தற்சார்பு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பொன்னையன், இயற்கை விவசாயிகள் சங்க அமைப்பாளர் செல்வம், கனிராவுத்தர் குளம் மீட்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் நிலவன் உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
போராட்டக்குழுவினர் மத்திய பா.ஜனதா அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவும் கோரி முழக்கங்களை எழுப்பினார்கள். அவர்கள் இரயில் நிலையத்தை நோக்கி ஊர்வலமாக வந்தனர்.
அங்கு ஈரோடு மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு ஆர்.சிவக்குமார் மேற்பார்வையில், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சம்பத், மோகன், கொடிச்செல்வன் ஆகியோர் தலைமையில் மற்றும் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து காத்துக் கொண்டிருந்தனர்.
போராட்டக்குழுவினர் இரயில் நிலையம் நுழைவு வாயில் பகுதிக்கு வந்தபோது அவர்களை காவலாளர்கள் தடுத்தனர். மேலும், இரயில் நிலையத்தை முற்றுகையிட அனுமதிக்க முடியாது என்று போராட்டத்திற்கு அனுமதி மறுத்தனர். ஆனால், போராட்டக்குழுவினர் இரயில் நிலையத்தை நோக்கி நகர்ந்தனர்.
அதைத்தொடர்ந்து அனைவரையும் கைது செய்தனர். மேலும், அவர்களை காவல்துறை வாகனத்தில் ஏற்றினார்கள்.
முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ், முன்னாள் எம்.பி. கணேசமூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வி.சி.சந்திரகுமார், ஓ.சுப்பிரமணியம், எஸ்.கே.ராஜேந்திரன், தமிழ்மாநில காங்கிரஸ் மாநில இளைஞர் அணி தலைவர் எம்.யுவராஜா உள்பட 617 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 47 பேர் பெண்கள்.
கைது செய்யப்பட்ட அனைவரும் ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்குக் கொண்டுச் செல்லப்பட்டனர். மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இரயில் மறியல் போராட்டத்தையொட்டி இரயில் நிலையத்துக்குள் போராட்டக்குழுவினர் யாரும் சென்று விடாத வகையில் பலத்த காவலாளர்கள் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இரயில் நிலையத்திற்குள் ஈரோடு இரயில் நிலைய காவல்துறை இன்ஸ்பெக்டர் சின்னத்தங்கம், இரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் நடராஜன் ஆகியோர் தலைமையில் காவலாளர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
இதனால் இரயில் நிலைய வளாகமே திங்கள்கிழமை பரபரப்பாக காணப்பட்டது.
