குன்னூர்,
எதிரில் வந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக காவல்துறை வேனை ஒதுக்கியதில் ஓட்டுநர் உள்பட மூன்று பேர் காயம் அடைந்தனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி நடந்த இரயில் மறியல் போராட்டத்தையொட்டி பாதுகாப்பு பணிக்காக செவ்வாய்க்கிழமை காலை 10.40 மணிக்கு ஊட்டியில் இருந்து 6 ஆயுதப்படை காவல்துறையினர், 20 ஊர்காவல் படையினர் ஒரு காவல்துறை வேனில் குன்னூருக்கு வந்து கொண்டிருந்தனர்.
அந்த வேனை ஓட்டுநர் பிரேம்நாத் என்பவர் ஓட்டி வந்தார். ஊட்டி – குன்னூர் சாலையில் பிக்கட்டி அருகில் வேன் வந்து கொண்டிருந்த போது, ஒரு வளைவில் எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக வேனை பிரேம்நாத் ஒதுக்கினார்.
அப்போது, எதிர்பாராத விதமாக நிலைத்தடுமாறிய வேன் நடுச்சாலையில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில், வேன் டிரைவர் பிரேம்நாத் மற்றும் ஊர்காவல் படையை சேர்ந்த அனந்தராமன், சிவக்குமார் ஆகிய 3 பேர் காயம் அடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து 3 பேரும் ஊட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து அருவங்காடு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த விபத்து காரணமாக சில நிமிடங்கள் ஊட்டி – குன்னூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
