சென்னை நுங்கம்பாக்கம் காவல் குடியிருப்பில் தலைமை காவலர் வீரவேல் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை சூளைமேடு காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் வீரவேல். இவர் கடந்த 1997 ஆம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக பணிக்குச் சேர்ந்தார். இவருக்கு மீனாம்பாள் என்ற மனைவி மற்றும் ஒரு மகனும், மகளும் உள்ளனர். வீரவேல் சிறுநீரக பாதிப்பு காரணமாக கடந்த சில வருடங்களாக சிகிச்சை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வீரமேல் பணிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். 

 

இந்நிலையில் அவரது அறையில் வீரவேல் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக  நுங்கம்பாக்கம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இவரது தற்கொலைக்கு காரணம் உடல்நலக் குறைவா அல்லது பணிச் சுமையா காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 7 நாட்களில் 4 போலீசார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.