Asianet News TamilAsianet News Tamil

பணம் தராததால் வாகனத்தை பறித்த போலீஸ்; மனைவி மற்றும் கைக் குழந்தையுடன் 25 கி.மீ நடந்தே சென்ற ஓட்டுநர்...

Police seized bike for not paying money driver walked about 25 km with his wife and baby...
Police seized bike for not paying money driver walked about 25 km with his wife and baby...
Author
First Published Mar 6, 2018, 9:08 AM IST


நாமக்கல்

வாகன சோதனையின்போது பணம் கேட்டு தராததால் ஓட்டுநர் ஒருவரின் மோட்டார் சைக்கிளை காவலளர்கள் பறித்துக் கொண்டனர். இதனால், மனைவி மற்றும் கைக் குழந்தையுடன் 25 கிலோ மீட்டர் நடந்து சென்று ஓட்டுநர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு கொடுத்து புலம்பினார்.

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா சோழசிராமணி அருகே உள்ள தேவம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். கார் ஓட்டுநரான இவர் தனது மனைவி வைதேகி மற்றும் கைக் குழந்தையுடன் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் குறைதீர்க்கும்  நாள் கூட்டத்திற்கு நேற்று வந்தார்.

அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் பழனிசாமியிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அதில், “கடந்த 1-ஆம் தேதி நானும், எனது மனைவியும் உறவினர் வீட்டிற்கு சென்று மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தோம். 

நாமக்கல்லில் இருந்து வேலகவுண்டம்பட்டி வழியாக வந்தபோது, வேலகவுண்டம்பட்டி ஆற்றுப்பாலம் அருகே மாலை 6 மணியளவில் காவலாளர்கள் எனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் நான் ஓட்டுனர் உரிமம், ஆர்.சி.புத்தகம் போன்ற ஆவணங்களை காண்பித்தேன். அந்த ஆவணங்களை பெற்றுக் கொண்ட சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவர், ஒரு ரசீதை கொடுத்து ரூ.2500 கொடுத்துவிட்டு வண்டியை எடுத்துக் கொண்டு செல்லுங்கள் என்று கூறினர். 

அவர் கொடுத்த ரசீதில் எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்று எழுதப்படவில்லை. எனினும் என்னிடம் பணம் தற்போது இல்லை. வண்டியை கொடுங்கள், நீதிமன்றத்தில் அபராத தொகையை செலுத்திவிடுகிறேன் என்று கூறினேன். 

அதற்கு அவர் நீதிமன்றத்தில் செலுத்தக் கூடாது, என்னிடம்தான் பணத்தை கொடுக்க வேண்டும். அப்போதுதான் வண்டியை எடுத்து கொண்டு போக முடியும் என்று கூறி எனது வண்டியை காவல் நிலையம் கொண்டு சென்றுவிட்டார் .

நாங்கள் காவல் நிலையத்திற்கு நடந்து சென்று, இன்னும் 25 கி.மீட்டர் செல்ல வேண்டி உள்ளது, எங்களிடம் பேருந்துக்கு கூட பணம் இல்லை. எனவே, வண்டியை தாருங்கள் என கேட்டோம். ஆனால், பணத்தை கொடுத்தால்தான் வண்டியை கொடுப்பேன் என்றும், இதற்கு மேலே  இங்கு பேசிக்கொண்டு இருந்தால், உன்னை அடித்து கொன்றுவிடுவேன் என்றும் மிரட்டினார்.

அந்த இடத்திலேயே இரவு 10 மணி வரை காத்திருந்தும் வண்டியை தரவில்லை. வேறு வழியில்லாமல் நானும், எனது மனைவியும் கைக் குழந்தையுடன் சுமார் 25 கி.மீட்டர் நள்ளிரவில் நடந்தே ஊருக்கு போய் சேர்ந்தோம். 

காவலாளர்கள் வண்டியை பிடுங்கிவைத்துக் கொண்டதால், நான் கூலி வேலைக்கு செல்ல முடியவில்லை. எனவே, எனது வண்டியை திருப்பி ஒப்படைக்க காவலாளர்களுக்கு உத்தரவிட வேண்டும். மேலும், எங்களை மன உலைச்சலுக்கு உள்ளாக்கிய சிறப்பு உதவி ஆய்வாளார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நான் செலுத்த வேண்டிய அபராத தொகை எவ்வளவு என்று தெரிவித்தால், அந்தத் தொகையை நான் நீதிமன்றத்தில் செலுத்திவிடுகிறேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன்” என்று அந்த மனுவில் கூறி இருந்தார்.  

அதனைப் பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் பழனிசாமி இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios