Police intimidation to jeweler shop owner in the name of investigation Complaint to police action ...

திருச்சி

திருட்டு நகைகள் குறித்த விசாரணை என்ற பெயரில் கடைக்கு வரும் காவலாளர்கள் தங்களை மிரட்டுவதாக திருவெறும்பூர் பகுதி நகை அடகுக்கடை உரிமையாளர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூரைச் சேர்ந்தவர் கணேசன் (43). இவர் திருவெறும்பூர் - நவல்பட்டு சாலையில் நகை அடகு கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், கடந்த 29-ஆம் தேதி, திருட்டு வழக்கில் கைதான நபருடன் வந்த மன்னார்குடி காவலாளர்கள், அங்கு திருடப்பட்ட நகையை கணேசனின் கடையில் விற்பனை செய்ததாகவும், அதனை திரும்பத் தரும்படியும் கூறியுள்ளனர்.

இதற்கு கணேசன், "அவ்வாறு நகை பெறப்படவில்லை. இங்கு அடகு மட்டுமே வைக்கப்படுகிறது, நகை விற்பதும், வாங்குவதுமில்லை' என்று தெரிவித்துள்ளார்.

அங்கிருந்து சென்ற காவலாளர்கள், பின்னர் மீண்டும், மீண்டும் நகைக் கடைக்கும், கணேசன் வீட்டுக்கும் வந்து மிரட்டியுள்ளனராம்.

இதுதொடர்பாக, திருவெறும்பூர் வியாபாரிகள் சங்கச் செயலாளர் ராஜேஷ், இணைச் செயலாளர் இக்பால், அடகுக்கடை உரிமையாளர் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் அண்ணாமலை, ராமநாதன் மற்றும் வணிகர் சங்கத்தினர் இணைந்து திருவெறும்பூர் காவல் நிலையத்தில் நேற்று புகார் கொடுத்துள்ளனர்.

அந்த புகாரில், "காவலாளர்கள் அடிக்கடி விசாரணை என்ற பெயரில் நகை அடகுக்கடை உரிமையாளரை மிரட்டி வருவதாகவும், இதுபோல் இனி நடைபெறாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.