கன்னியாகுமரி

கன்னியாகுமரியில் பணி ஓய்வு பெற ஒருமாதமே இருக்கும் நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். 

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே உள்ள பரக்கோடு பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (58). தமிழ்நாடு சிறப்பு காவல்படையில் ஆய்வாளராக பணி புரிந்து வந்தார். 

இவருக்கு கன்னியாகுமரியில் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக ராமச்சந்திரன், 80 காவலாளார்களுடன் கன்னியாகுமரி பேரூராட்சிக்கு சொந்தமான ஒரு கட்டிடத்தில் தங்கி இருந்து பணிபுரிந்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு ராமச்சந்திரன் மற்றும் காவலாளர்கள் கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ராமச்சந்திரன் திடீரென ‘நெஞ்சு வலிக்கிறது’ என்று கூறியப்படி சுருண்டு விழுந்தார். 

இதனைக் கண்ட மற்ற காவலாளர்கள் அவரை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்தஸ்மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து அவரது உடல் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இறந்த ராமச்சந்திரனுக்கு மீரா சிஞ்சுபாய் என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ராமச்சந்திரன் பணியில் இருந்து ஓய்வு பெற இன்னும் ஒரு மாதமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.