கோயில் குருக்கள் ஒருவரை கட்டிப்போட்டு அவரது மனைவியைக் கொலை செய்த சம்பவம் சென்னை வடபழனியில் நடந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை, வடபழனி சிவன் கோயிலில் குருக்களாக இருப்பவர் பால கணேஷ் (40). இவரது மனைவி ஞானப்பிரியா (35). வடபழனி தெற்கு சிவன் கோவில் தெருவில் வாடகை வீட்டில் தங்கி உள்ளனர். 

பாலகணேசும், ஞானப்பிரியாவும் வடபழனி தெற்கு சிவன் கோவில் தெருவில் உள்ள வீட்டின் முதல் தளத்தில் வசித்து வருகின்றனர். நேற்றிரவு அவர்கள வழக்கம்போல் உறங்கச் சென்றனர்.

அதே தளத்தில் வசித்து வரும் வீட்டின் உரிமையாளர் விஜயலட்சுமி, இன்று காலை குளியறைக்கு சென்றபோது உள்ளே பாலகணேஷ் கைகள் மற்றும் கழுத்து கட்டப்பட்ட நிலையில் மயங்கி கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இது குறித்து பாலகணேஷின் மனைவி ஞானப்பிரியாவுக்கு தகவல் சொல்ல அவரது வீட்டு கதவை தட்டியபோது, கதவு திறந்தே கிடந்துள்ளது. சாத்திக் கிடந்த கதவை திறந்தபோது வீட்டின் உள்ளே ஞானப்பிரியாவும் கைகள் கட்டப்பட்டு தலையின் பின்பகுதியில் தாக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த விஜயலட்சுமி, போலீசாருக்கும், ஆம்புலன்சுக்கும் தகவல் கொடுத்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசாரும், 108 ஆம்புலன்ஸ் வாகனமும், காயமடைந்தவர்களை மீட்க முயன்றனர். அப்போது ஞானப்பிரியா ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.

கைகள், கழுத்து கட்டப்பட்டு கிடந்த பாலகணேஷை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஞானப்பிரியாவின் உடல், பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதன் பின்னர், கொலை நடந்த வீட்டுக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. தடயவியல் நிபுணர்களும் ஆய்வு செய்தனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் அதிகாலையில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்று கூறினர்.

பாலகணேஷ் - ஞானப்பிரியா தாக்கப்பட்டபோது யாருக்கும் சத்தம் கேட்கவில்லையா? சில சவரன் நகைகளுக்காக ஞானப்பிரியா கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் கணவன் - மனைவி கைகளைக் கட்டிப்போட்டு கொலை, கொள்ளை நடந்திருப்பது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.