சென்னையில் தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன்பு மயிலாப்பூர், அபிராமபுரம், பட்டினம்பாக்கம் ஆகிய இடங்களில் 7 வீடுகளின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் நகை, பணம் டிவி, மற்றும் லேப்டாப் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.

இதுகுறித்து மயிலாப்பூர் துணை ஆணையர் சரவணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் கொள்ளையர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில் மயிலாப்பூரில் ஒரு வீட்டில் கொள்ளையர்கள் திருடிய போது பதிவான சிசிடிவி காட்சிகள் போலீசாருக்கு கிடைத்தன.

இதன்மூலம் நடத்திய விசாரணையில், திருடிய நபர்கள் மயிலாப்பூரைச் சேர்ந்த பொட்ட மணி, வீரமணி மற்றும் எம்.ஜி.ஆர்.நகரைச் சேர்ந்த ஆனந்தன் என்பது தெரிய வந்தது.

இதில் மணி மற்றும் வீரமணி ஆகியோரை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து டிவி மற்றும் லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவங்களில் முக்கிய நபரான ஆனந்தன் தலைமறைவாக உள்ளதால் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.