செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை அவமதிப்பது தொடர்பாக, சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி திடீரென 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இதனால் நாடெங்கும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

புண்பட்ட மனதை புகை போட்டு ஆத்து என்பார்கள் ஆனால் நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு தங்கள் ஆதங்கத்தை தீர்த்துகொண்டனர். ரூபாய் நோட்டுகளை குப்பை தொட்டியில் கிடப்பது போலவும், ஆடுமாடுகள் தின்பது போலவும் , ரூபாய் நோட்டுகளுக்கு மாலை போட்டு மரணமடைந்தது போலவும் , ரூபாய் நோட்டுகளை வரிசையாக அடுக்கி வைத்து அதற்கு பாடை கட்டி கண்ணீர் விட்டு அழுவது போலவும் , சிலர் முகத்தை துடைத்து கொள்வது போலவும் மீம்ஸ் செய்து வலைதளங்களில் , வாட்ஸ் அப்களில் உலவ விட்டனர்.
இன்னும் சிலர் திரைப்பட காட்சிகளை குறிப்பாக வடிவேலு பட காமெடிக்களை போட்டு மீம்ஸ் செய்திருந்தனர். ஆனால் இதற்கெல்லாம் முத்தய்ப்பாக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் வெறும் காகிதம் அது கடலை மடிக்கத்தான் லாயக்கு என்பது போல் சிலர் கடலைகளை பொட்டலமாக கட்டிய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வெளியிட்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என வழக்கறிஞர் ஒருவர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த வழக்கறிஞர் சீனு தாமஸ் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் செல்லாது என அறிவிக்கப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைக் கொண்டு கடலை பொட்டலம் சுற்றுவது போன்ற பல்வேறு படங்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இது அந்த ரூபாய் நோட்டுக்களில் அச்சடிக்கப்பட்டுள்ள தேசத்தந்தை காந்தியை அவமதிக்கும் செயல் என்றும் அந்தப் புகாரில் தெரிவித்துள்ளார். மேலும் அந்த நோட்டுக்களுக்கு மதிப்பு இருக்கும் நிலையில் இது போன்ற காட்சிகளை பரப்புபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புகாரை விசாரிக்குமாறு மத்திய பொருளாதார குற்றப்பிரிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
