'கேப்டன்' விஜயகாந்த் நினைவு தினம்; தேமுதிக அமைதி பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுப்பு!
கேப்டன் விஜயகாந்த் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னையில் தேமுதிகவினர் அமைதி பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
'கேப்டன்' விஜயகாந்த் நினைவு தினம்
நடிகரும், தேமுதிக தலைவருமாக இருந்த கேப்டன் விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28ம் தேதி உடல்நலக்குறைவால் காலமாமானர். கேப்டன் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த முதலாம் ஆண்டு நினைவு தினத்தை குருபூஜையாக கடைபிடிக்க தேமுதிக முடிவு செய்துள்ளது.
இந்த குருபூஜையில் பங்கேற்க தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி , தவெக தலைவர் விஜய் உள்பட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேமுதிக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, மேலும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த தலைமையில் மாநில தேர்தல் ஆணையம் அலுவலகத்தில் இருந்து விஜயகாந்த் நினைவிடம் வரை அமைதிப்பேரணி செல்ல அக்கட்சி திட்டமிட்டு இருந்தது.
காவல்துறை அனுமதி மறுப்பு
ஆனால் இந்த அமைதி பேரணிக்கு காவல்துறை அனுமதி கொடுக்க மறுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமைதி பேரணியால் போக்குவரத்து இடையூறு ஏற்படும் என்பதால் காவல்துறை மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் காவல்துறையின் தடையை மீறி மாநில தேர்தல் அலுவலகத்தில் இருந்து பேரணியாக செல்ல தேமுதிகவினர் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்களும், தேமுதிக தொண்டர்களும் திரண்டு வந்து விஜயகாந்தின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர். விஜயகாந்தின் பெருமையை பறைசாற்றும் வகையில் தேமுதிக இன்று பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
25,000 பேருக்கு அன்னதானம்
கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் இன்று சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது. இதேபோல் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கோயில்களில் அன்னதானம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஏழை, எளிய மக்களுக்கு தேமுதிக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கவும் அந்த கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.
விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் என்பதால் சமூகவலைத்தளத்தில் அவரது நினைவுகளை பலரும் பகிர்ந்து வருகின்றனர். ''அரசியலில் நேர்மைக்கும், துணிச்சலுக்கும் இலக்கணமாக திகழந்தவர் கேப்டன் விஜயகாந்த். அவரைப் போல நல்ல அரசியல்வாதியை, மனிதநேயம் மிக்க பண்பாளரை இனிமேல் தமிழ்நாட்டில் காண்பது அரிது'' என்று பல்வேறு தரப்பினரும் விஜயகாந்துக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர்.