சென்னை கீழ்ப்பாக்கம் ஐ.ஜி. அலுவலகத்தில் ஆயுதப்படை காவலர் மணிகண்டன் என்பவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை கீழ்ப்பாக்கத்தில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையினரின் தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு ஐ.ஜி.யாக ‌ஷகில் அக்தர் உள்ளார். இங்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணிநேரமும் ஷிப்டு முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று அதிகாலை மணிகண்டன் அவரது பிறந்தநாளை நண்பர்களுடன் கொண்டாடிவிட்டு பணிக்கு வந்தார். 

பின்னர் 3-வது பட்டாலியனை சேர்ந்த இவர் சீருடையில் துப்பாக்கி ஏந்திய நிலையில் பணியில் ஈடுபட்டிருந்தார். இந்நி்லையில் காலை 6 மணியளவில் மணிகண்டன் தான் வைத்திருந்த துப்பாக்கியால் திடீரென தன்னைத் தானே சுட்டுக்கொண்டார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே மணிகண்டன் உயிரிழந்தார். துப்பாக்கி சத்தம் ஐ.ஜி.அலுவலகம் மட்டுமின்றி அந்த பகுதி முழுவதுமே எதிரொலித்தது. இதனையடுத்து மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றனர். 

தற்கொலை செய்து கொண்ட மணிகண்டன் பெண் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. காதல் பிரச்சனையால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது பணிச்சுமையின் காரணமா தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். சமீபமாக காவல்துறையில் இருக்கும் காவலர்கள் மன அழுத்தம் காரணமாக தற்கொலைகள் செய்து கொள்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.