Police attacked CPIM secretary Party sticks to demand action ......

சிவகங்கை

சிவகங்கையில் காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளரை சரமாரியாக தாக்கிய காவலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சிவகங்கை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராக இருப்பவர் எம்.கந்தசாமி (45). இவர் திருப்புவனம் அருகே வாவியரேந்தல் கிராமத்திலுள்ள தனது தாயப் பார்ப்பதற்காக சென்றுவிட்டு, மனைவியுடன் திருப்புவனம் வாரச் சந்தையில் காய்கறி வாங்குவதற்காக சென்றார்.

அப்போது அங்கு வந்த திருப்புவனம் காவல் நிலைய சார்பு - ஆய்வாளர் திருமுருகன் மற்றும் காவலாளர்கள் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி சாலையோர கடைகளை அகற்றி உள்ளனர். இதனை கம்யூனிஸ்டு கந்தசாமி தட்டிக் கேட்டுள்ளார்.

அப்போது சார்பு - ஆய்வாளருக்கும் கந்தசாமிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு காவலாளர்கள் கந்தசாமியை ஆட்டோவில் ஏற்றி, காவல் நிலையத்திற்கு கொண்டுச் சென்றுள்ளனர். அங்கு கந்தசாமியை காவலாளர்கள் சரமாரியாக தாக்கினராம்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருப்புவனம் பகுதியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காவல் நிலையம் முன்பு திரண்டு காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். மேலும் மதுரை - இராமேசுவரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து கந்தசாமி விடுவிக்கப்பட்டார்.

மறியல் செய்தவர்கள் கந்தசாமியை தாக்கிய சார்பு - ஆய்வாளர் திருமுருகன் மற்றும் காவலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

சம்பவ இடத்திற்கு வந்த மானாமதுரை காவல் கண்காணிப்பாளர் சங்கர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தயைடுத்து மறியல் கைவிடப்பட்டது.

அதன்பின் கந்தசாமி திருப்புவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிவகங்கை டி.எஸ்.பி மங்களேஸ்வரன் கந்தசாமியிடம் காவல் நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். அதைத் தொடர்ந்து கந்தசாமி சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.