திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பெற்று வரும் காவேரி மருத்துவமனை முன்பு கூடி இருந்த கூட்டத்தில், திமுக தொண்டர்கள் போல கூட்டத்திற்குள் புகுந்து செல்போன் மற்றும் பணத்தை கொள்ளையடித்த  தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பிக் பாகெட் அடிக்க வந்த  கொள்ளையர்கள் 14 பேரை போலீசார் கைது  செய்தனர்.

சென்னை காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பெற்று வருகிறார். இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் மருத்துவமனை முன்பு   திரண்டுள்ளனர். அப்போது வாலிபர் ஒருவர் கூட்டத்தோடு கூட்டமாக கலந்து பொதுமக்களிடம் இருந்து பர்ஸ் மற்றும் கொள்ளையடித்துள்ளார். இதை பார்த்த தொண்டர்கள் அந்த வாலிபரை கையும் களவுமாக பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த  போலீசாரிடம் திருடனை ஒப்படைத்தனர். அவனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது புதுப்பேட்டையை சேர்ந்த முத்துகுமார் என்று தெரியவந்தது. 

 முத்துகுமாரை கைது செய்தனர். அவனிடம் இருந்து ரூ.60ஆயிரம் மதிப்புள்ள 2 செல்போன்கள், ரூ.2 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அவனிடம் போலீசார் தொடர் விசாரணை நடத்தினர்.

அப்போது திண்டுக்கல் மாவட்டம் பேகம்பூரை சேர்ந்த அமீர் பாஷா(51) தலைமையில் திருச்சி, பரமக்குடி, முசிறி, தேனி, வேலூர், திண்டுக்கல், மதுரை, கரூர், ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த 14 பேர் திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் லாட்ஜில் அறை எடுத்து தங்கி, தொண்டர்கள் கூட்டத்தில் தொண்டர்கள் போல் நுழைந்து செல்போன் மற்றும் பணத்தை திருடி வந்தது தெரியவந்தது. இதையடுத்து முத்துகுமார் கொடுத்த தகவலின் படி மயிலாப்பூர் போலீசார் லாட்ஜ் மற்றும் காவேரி மருத்துவமனை முன்பு திரண்டிருந்த தொண்டர்கள் கூட்டத்தில் இருந்த 13 பேரை  போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து செல்போன்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 14 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, அனைவரும் பல்வேறு வழக்குகளில் சிறையில் இருக்கும்போது அமீர்பாஷா தலைமையில் திட்டம் போட்டு கடந்த 5 ஆண்டுகளுக்கு மேல் தமிழகம் முழுவதும் நடந்த பொது கூட்டம், திருவிழா, கட்சிகளின் மாநாடு நடக்கும் பகுதிகளுக்கு முன்னதாகவே சென்று அனைவரும் 3 பேர் கொண்ட குழுவாக தனித்தனியாக பிரிந்து திருடி வந்தது தெரியவந்தது.

இதுவரை 14 பேரும் பொதுமக்களிடம் இருந்து பல லட்சம் பணம், 500 சவரனுக்கு மேல் நகைகளை கொள்ளையடித்துள்ளது தெரியவந்துள்ளது.  கொள்ளையடித்த பணத்தில் அனைவரும் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.