சென்னையில் போலி பஸ் பாஸ் தயாரித்து விற்பனை செய்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பேருந்து பயணிகளுக்கு சலுகை விலையில் பஸ் பாஸ் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதாவது ஆயிரம் ரூபாய் கொடுத்து பாஸ் வாங்கினால் சென்னை மாநகர பேருந்துகளில் ஒரு மாதத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் பயணிக்க முடியும். ஆனால் இதில் குளிர் சாதன பேருந்து அடங்காது.

இந்நிலையில் ஆயிரம் ரூபாய் பாஸ்களை போலியாக தயார் செய்து சிலர் குறைந்த விலையில் விற்பனை செய்வதாக சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி மத்தியக் குற்றப்பிரிவு மோசடித் தடுப்புப் பிரிவில் புகார் அளித்தார்.

இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, ஆதம்பாக்கம் டிப்போவைச் சேர்ந்த கிருஷ்ணகுமார், திருவான்மியூர் டிப்போவைச் சேர்ந்த ஜெகதீஷ், அண்ணா நகர் டிப்போவைச் சேர்ந்த சுரேஷ், ஆவடி டிப்போவைச் சேர்ந்த பிரகாஷ் ஆகிய மாநகரப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் முறைகேடாக பஸ் பாஸ் வழங்கி வந்தது தெரியவந்தது.

பின்னர், அவர்களை கைது செய்த போலிசார் ஆந்திராவைச் சேர்ந்த ரமேஷ்பாபு என்பவரையும் கைது செய்தனர்.

ரமேஷ் தயாரித்து கொடுக்கும் போலி பஸ்பாஸ்களை டிப்போவில் வைத்து போக்குவரத்து கழக ஊழியர்கள் விற்பனை செய்ததும் தெரிய வந்தது.