Asianet News TamilAsianet News Tamil

தஞ்சாவூர் இரயில் நிலையத்தை முற்றுகையிட்ட 253 பேர் கைது... மத்திய அரசை கண்டித்ததால் போலீஸ் அதிரடி...

Police arrest 253 people who held in train block protest in Thanjavur
Police arrest 253 people who held in train block protest in Thanjavur
Author
First Published May 4, 2018, 11:13 AM IST


தஞ்சாவூர்
 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் தஞ்சாவூர் இரயில் நிலையத்தை முற்றுகையிட்ட 253 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்த மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் 29-ஆம் தேதி முதல் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

அரசியல் கட்சியினர், விவசாயிகள், மாணவர்கள், பொதுநல அமைப்பினர் என பலரும் முற்றுகை போராட்டம், உண்ணாவிரதம், மனித சங்கிலி, ஆர்ப்பாட்டம், மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நேற்று தஞ்சாவூர் இரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். 

அதன்படி, தஞ்சாவூர் மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் தஞ்சை இரயில் நிலையம் அருகே திரண்டனர். பின்னர், அவர்கள் மாநில பொதுச்செயலாளர் சண்முகம் தலைமையில் மாநில தலைவர் சுப்பிரமணியன், மாநில நிர்வாகிகள் சாமி.நடராஜன், மாதவன், பொன்னுசாமி ஆகியோர் முன்னிலையில் இரயில் நிலையத்தை முற்றுகையிடுவதற்காக சென்றனர். 

அப்போது, அங்கு பாதுகாப்புக்காக நின்ற காவலாளர்கள் இரண்டு இடங்களில் இரும்பு கம்பிகளால் ஆன தடுப்புகளை அமைத்து இருந்தனர். ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முதல் தடுப்பை தள்ளிக்கொண்டு இரயில் நிலைய வாசலுக்கு சென்றனர். ஆனால், காவலாளர்கள் அங்கு தடுப்புகளை அமைத்து இருந்ததால் அவர்களால் உள்ளே செல்ல முடியவில்லை. 

அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தடுப்புகளை தள்ளிக்கொண்டு உள்ளே செல்ல முயன்றனர். காவலாளர்கள் அவர்களை உள்ளே செல்ல விடாமல் தடுத்ததால் அவர்களுக்கு இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. 

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இரயில் நிலைய வாசலில் அமர்ந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். 

இதில் மாவட்ட நிர்வாகிகள் கண்ணன், பழனி அய்யா, காமராஜ், கோவிந்தசாமி, காதர் உசேன், கோவிந்தராஜ், ஞானமாணிக்கம், கணேசன், முனியாண்டி, சிதம்பரம் உள்பட பலர் பங்கேற்றனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 7 பெண்கள் உள்பட 253 பேர் கைது செய்யப்பட்டனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios