சென்னை:

சென்னையில் அதிகரித்துவரும் குற்றங்களைத் தடுக்க காவல்துறையினர் ஒரே நாளில் 1513 பேரை அதிரடியாக கைது செய்தது.

புத்தாண்டு பிறந்து இரண்டாவது வாரத்தில் காலெடித்து வைக்கும் நேரத்தில் இந்த வருடம் குற்றங்களின் எண்ணிக்கையை குறைத்தே தீர வேண்டும் என்று காவல்துறையினர் உறுதிமொழி எடுத்துள்ளனர் போலும்.

சென்னையில் அதிகரித்துவரும் குற்றங்களைத் தடுக்க வேண்டும் என்று காவலாளர்களுக்கு சென்னை நகர காவல் ஆணையர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.

அந்த உத்தரவின்பேரில், காவலாளர்கள் நேற்று முன்தினம் இரவு முதல், சென்னை முழுவதும் உள்ள தங்கும் விடுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அச்சோதனையின்போது, சந்தேகத்தின் அடிப்படையில் 1463 பேர், குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் 41 பேர், பழைய குற்றவாளிகள் 6 பேர், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட குற்றவாளிகள் 3 பேர் என மொத்தம் 1,513 பேரை கைது செய்தனர்.

மேலும், புத்தாண்டு போனசாக போதையில் வாகனம் ஓட்டிய 83 பேரும் காவலாளர்களிடம் சிக்கினர்.