சேலம்,

விபத்தில் இறந்த ஓட்டல் தொழிலாளியின் குடும்பத்திற்கு நட்டஈடு வழங்காத அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் 2 அரசு பேருந்துகள் நீதிமன்ற அமினாவால் பறிமுதல் செய்யப்பட்டன.

இராஜேந்திரன் (44). இவர் சேலம் ஜான்சன்பேட்டை ராஜாநகரைச் சேர்ந்தவர். இவர் சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

தினமும் ஓட்டலுக்கு பேருந்தில் வந்து செல்வது வழக்கம். கடந்த 4.5.2011 அன்று ஜான்சன்பேட்டையில் இருந்து பழைய பேருந்து நிலையம் சென்ற அரசு நகர பேருந்தில் அவர் வந்தார். சேலம் திருவள்ளுவர் சிலை அருகே பேருந்து வந்தபோது, இராஜேந்திரன் இறங்கினார்.

அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்து மோதி இராஜேந்திரன் படுகாயம் அடைந்தார். பின்னர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட ஓட்டல் தொழிலாளி இராஜேந்திரனின் மனைவி மலர், மகள் சுகப்பிரியா ஆகியோர் சார்பில் வழக்குரைஞர்கள் மாணிக்கம், மாயன் மூலம் மோட்டார் வாகன விபத்து பிரிவின்கீழ் ரூ.10 இலட்சம் நஷ்டஈடு கோரி சேலம் தனி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் கடந்த 2014–ம் ஆண்டு தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதாவது பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.6 லட்சத்து 62 ஆயிரத்து 138 நஷ்டஈடு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஆனால், சேலம் கோட்ட அரசு போக்குவரத்து கழக நிர்வாக அதிகாரிகள் நஷ்டஈடு தொகை வழங்காமல் காலதாமதப்படுத்தி வந்தனர்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தரப்பில் மீண்டும் நீதிமன்றத்தில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரணைக்கு ஏற்ற தனி நீதிமன்ற நீதிபதி பாலசுப்பிரமணியன், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வட்டியுடன் சேர்த்து ரூ.7 இலட்சத்து 9 ஆயிரத்து 716–ஐ நட்ட ஈடாக வழங்க வேண்டும் என போக்குவரத்துக்கழக நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். மேலும் நட்டஈடு வழங்காத பட்சத்தில் 2 அரசு பேருந்துகளை ஜப்தி செய்யவும் உத்தரவிடப்பட்டது.

அதன்படி, புதன்கிழமை நீதிமன்ற அமினா அர்விந்த் தலைமையிலான ஊழியர்கள் சேலம் பழைய பேருந்து நிலையம் வந்தனர்.

அங்கிருந்து ஆட்டையாம்பட்டி புறப்பட தயாரான 2 அரசு பேருந்துகளை பறிமுதல் செய்து நீதிமன்ற வளாகத்திற்குக் கொண்டுச் சென்றனர்.