Asianet News TamilAsianet News Tamil

ஒட்டுமொத்த தொண்டர்களையும் புண்படுத்தியது - சி.வி சண்முகம் மேல்முறையீட்டு மனுவில் உருக்கம்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசுடைமையாக்கிய  சட்டம் செல்லாது என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதிக்கக்கோரி அதிமுக சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
 

Poes Garden House
Author
Chennai, First Published Dec 1, 2021, 8:16 PM IST

மனுவில் வேதா நிலையம் கையகப்படுத்தப்படும் முன் மறைந்த ஜெயலலிதாவின் குடும்ப உறுப்பினர்கள் தீபா, தீபக் ஆகியோர் கருத்துகள் கேட்கப்பட்டதாகவும், அரசு தன்னிச்சையாக செயல்பட்டதாக எந்த ஆதாரங்களும் இல்லாத நிலையில் கையகப்படுத்தியதை ரத்து செய்த உத்தரவு தவறானது என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல தீர்ப்பை ரத்து செய்யக் கோரி மேல் முறையீட்டு மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த  போயஸ் தோட்ட வேதா நிலையம் இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்றுவது தொடர்பாக முந்தைய அதிமுக அரசு, சட்டம் இயற்றியது. அந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக, வேதா நிலையத்தை கையகப்படுத்துவது தொடர்பாக உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டன. வேதா நிலையத்துக்கு இழப்பீடாக 67 கோடியே 90 லட்சம் ரூபாயும் நீதிமன்றத்தில் இழப்பீடு தொகையாக டிபாசிட் செய்யப்பட்டது. வேதா நிலையத்தை கையகப்படுத்தியதை எதிர்த்தும், இழப்பீடு நிர்ணயித்ததை எதிர்த்தும் ஜெயலலிதாவின் வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட தீபா, தீபக் தரப்பில் வழக்குகள் தொடரப்பட்டன.

சமீபத்தில் இவ்வழக்கை விசாரித்த வந்த  நீதிபதி சேஷாயி,  மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லமான வேதா நிலையத்தை, அரசுடைமையாக்கிய சட்டம் செல்லாது என்று அதிரடி தீர்ப்பளித்தார். மேலும் ஜெயலலிதா வாரிசுகள் என அறிவிக்கப்பட்ட தீபக்,தீபா ஆகியோரிடம் இல்லத்தின் சாவியை 3 வாரங்களில் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

இந்நிலையில் இந்த வழக்கில் அதிமுக மேல்முறையீடு செய்யும் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்த வந்த நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதிமுக வழிகாட்டுதல் குழு உறுப்பினரும், ஜெயலலிதா நினைவு இல்ல அறக்கட்டளை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதேபோல், உயர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்யக் கோரியும் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுக்களில், புகழ்பெற்ற தலைவர்களின் இல்லங்களை நினைவு இல்லங்களாக மாற்றுவது புதிதல்ல என்றும், உலக தலைவர்கள் பலரின் இல்லங்கள் நினைவில்லங்களாக மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேதா நிலையம் கையகப்படுத்திய உத்தரவை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மாநில அரசு மேல் முறையீடு செய்ய அக்கறை காட்டாததால், அறக்கட்டளை உறுப்பினர் என்ற முறையில் மேல் முறையீடு செய்ய உரிமை உள்ளதாகவும், அதனால் மேல் முறையீடு செய்ய அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. நினைவில்லமாக மாற்றுவது அரசு பணத்தை வீணடிக்கும் செயல் என்பன போன்ற தனி நீதிபதி கருத்துக்கள் தேவையற்றவை எனவும், இந்த தீர்ப்பு அதிமுக தொண்டர்களை புண்படுத்தியுள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவின்படி, வேதா நிலையம் இல்லத்தின் சாவியை ஒப்படைத்து விட்டால், அது கட்சிக்கு பெருத்த பாதிப்பை ஏற்படுத்தும் எனவும், ஜெயலலிதா நினைவு இல்ல அறக்கட்டளை அமைத்ததன் நோக்கம் வீழ்த்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் வேதா நிலையம் கையகப்படுத்தப்படும் முன் தீபா, தீபக் கருத்துகள் கேட்கப்பட்டதாகவும், அரசு தன்னிச்சையாக செயல்பட்டதாக எந்த ஆதாரங்களும் இல்லாத நிலையில் கையகப்படுத்தியதை ரத்து செய்த உத்தரவு தவறானது என்றும் கூறப்பட்டுள்ளது.

வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்ற வேண்டியதன் அவசியம் குறித்த ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள போதும், பொது பயன்பாடு இல்லை என தனி நீதிபதி முடிவுக்கு வந்திருக்க கூடாது என்பதால், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மேல் முறையீட்டு மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios