தமிழகத்தில் புதிதாக அமைய உள்ள பேருந்து நிலையங்களுக்கு மன்னர்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்களைச் சூட்ட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். வடதமிழக மன்னர்களை அரசு புறக்கணிப்பதாகவும் சாடியுள்ளார்.
தமிழகத்தில் புதிதாக அமைய உள்ள பேருந்து நிலையங்களுக்கு அந்தந்த மண்ணின் வரலாற்றில் இடம்பெற்ற மன்னர்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்களைச் சூட்ட வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மன்னர்கள் பெயர் சூட்டப்பட வேண்டும்
புதிதாக விரிவுபடுத்தப்பட்டு வரும் பேருந்து நிலையங்களுக்குப் பின்வரும் பெயர்களைச் சூட்ட அவர் பரிந்துரைத்துள்ளார்.
“தர்மபுரியில் தகடூரை ஆட்சி செய்த கடையெழு வள்ளல்களில் ஒருவரான அதியமான் நினைவாக, மழவர் பெருமகன் வள்ளல் அதியமான் புதிய பேருந்து நிலையம் என்று பெயரிட வேண்டும். திண்டிவனத்தில் சங்க காலத்தில் ஓய்மா நாட்டை ஆட்சி செய்த ஓய்மான் நல்லியக்கோடன் பெயரினைச் சூட்ட வேண்டும். மயிலாடுதுறையில் சுதந்திரப் போராட்ட வீரர் சாமி நாகப்ப படையாட்சியார் பெயரைச் சூட்டி கௌரவிக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர் போன்ற பகுதிகளில் அமைய உள்ள பேருந்து நிலையங்களுக்கும் அந்தந்தப் பகுதி மன்னர்களின் பெயர்களைச் சூட்ட வேண்டும்” ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அரசுக்கு கண்டனம்
வடதமிழகத்தைச் சேர்ந்த மன்னர்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்களை மறைப்பதும், அவர்களுக்குச் சிறப்பு செய்யத் தவறுவதும் வேதனையளிப்பதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
படைவேட்டில் சம்புவராய மன்னர்களுக்கும், சேந்தமங்கலத்தில் காடவராய மன்னர்களுக்கும், திருவண்ணாமலையில் வீரவல்லாள மகாராஜாவுக்கும், மணிமண்டபங்கள் அமைக்க வேண்டும் என்ற நீண்ட காலக் கோரிக்கையை அரசு இன்னும் நிறைவேற்றவில்லை என்று அவர் சாடியுள்ளார்.
"தமிழக வரலாற்றை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல, நகராட்சி நிர்வாகத் துறை இந்தப் பெயர்களைச் சூட்ட வேண்டியது அவசியம்" என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


