வேலூர்

வேலூரில் உள்ள கூட்டுறவு கடன் சங்கத்தை திறக்காததால் அதற்கு பூட்டுப் போட்ட பா.ம.க.வினர்  போராட்டத்திலும் ஈடுபட்டனர். மாலை வரை சங்கம் திறக்கப்படாததால் மக்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர்.

வேலூர் மாவட்டம், சிப்காட்டை அடுத்த லாலாப்பேட்டையில், பொன்னை சாலையில் லாலாப்பேட்டை நகர கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. 

இந்தச் சங்கத்தின் இயக்குனர் தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க. உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 43 பேர் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் ஒட்டப்படுவதாக இருந்தது. ஆனால், பட்டியல் ஒட்டப்படாததால் அங்கு காத்திருந்த பா.ம.க.வினர் லாலாப்பேட்டை கூட்டுறவு கடன் சங்கத்தின் முன்பு போராட்டம் நடத்தினர். பின்னர் காவலாளர்கள் சமரசம் செய்ததை அடுத்து கலைந்து சென்றனர். 

ஆனாலும் பா.ம.க.வை சேர்ந்த சிலர் இரவு முழுவதும் கூட்டுறவு கடன் சங்கம் முன்பு காத்திருந்து வேட்பாளர் பட்டியல் ஒட்டப்படுகிறதா? என்று கண்காணித்தனர்.

இந்த நிலையில், நேற்று காலை 10 மணியளவில் கூட்டுறவு கடன் சங்கத்தின் முன்பு பா.ம.க.வினர் திரண்டனர். ஆனால், மதியம் 1 மணி வரை கூட்டுறவு கடன் சங்கத்தை திறக்கவில்லை. மேலும் வேட்பாளர் பட்டியலும் ஒட்டப்படவில்லை. 

இந்தச் சங்கத்தின் வளாகத்தில்தான் இ-சேவை மையம் செயல்படுகிறது. இந்த இ-சேவை மையம் மூலம்தான் இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு பல்வேறு சான்றிதழ்கள் வழங்க ஆன்-லைன் மூலம் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சேவை மையமும் நேற்று மதியம் வரை திறக்கவில்லை.

இதே லாலாப்பேட்டை நகர கூட்டுறவு கடன் சங்க கட்டுப்பாட்டின் கீழ் லாலாப்பேட்டை, அக்ராவரம், நெல்லிக்குப்பம், சீக்கராஜபுரம், மருதம்பாக்கம், கத்தாரிக்குப்பம், கொண்டகுப்பம், ஏகாம்பரநல்லூர், கிருஷ்ணாவரம், குமணந்தாங்கல், தென்றல் நகர், சீக்கராஜபுரம் மோட்டூர், சத்திரம் புதூர் உள்பட பல்வேறு இடங்களில் ரேசன் கடைகளும் செயல்பட்டு வருகிறது.

நேற்று மதியம் வரை கூட்டுறவு சங்கம் திறக்கப்படாததால் இங்கிருந்து பல்வேறு இடங்களுக்கு ரேசன் கடைகளை திறக்க செல்லும் ஊழியர்களும் செல்லவில்லை. இதனால் ரேசன் கடைகளும் இந்த பகுதியில் நேற்று மதியம் வரை திறக்கப்படாததால் மக்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகினர்.

இதனால், லாலாப்பேட்டை நகர கூட்டுறவு கடன் சங்க முன்னாள் தலைவர் கோவிந்தசாமி தலைமையில், பா.ம.க.வினரும், மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பா.ம.க. நிர்வாகிகள் எல்.வி.மணி, மணிஎழிலன், ஜோதி, தயாளன், பாலு, குமார் உள்பட பலர் பங்கேற்றனர். 

அப்போது அங்கிருந்த காவலாளர்கள், அவர்களை சமரசம் செய்தனர். அந்த சமயத்தில் சிலர் வந்து லாலாப்பேட்டை நகர கூட்டுறவு கடன் சங்க தேர்தலில் போட்டியிடும் 11 பேர் கொண்ட பட்டியலை ஒட்ட முயன்றனர். 

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இதைப்பார்த்ததும் அந்த பட்டியலை கிழித்து எறிந்தனர். பின்னர் அவர்கள் கூட்டுறவு கடன் சங்கத்தின் நுழைவு வாயிலின் கேட்டை மூடி பூட்டு போட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அங்கிருந்த ராணிப்பேட்டை காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் காவலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யப்போவதாக தெரிவித்து போலீஸ் வாகனத்திலும் ஏற்றினர். 

பின்னர் அவர்களிடம் காவலாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பூட்டிய பூட்டை திறந்தனர். அதன் பின்னரும் பா.ம.க.வினர் தொடர்ந்து கூட்டுறவு கடன் சங்கத்தின் அருகிலேயே அமர்ந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர், நேற்று மாலை வரை கூட்டுறவு சங்கம் திறக்கப்படாததால் வாடிக்கையாளர்களும், ரேசன் கடைகள் திறக்கப்படாததால் மக்களும், இ-சேவை மையம் திறக்கப்படாததால் சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்க வந்திருந்த மக்களும் பாதிக்கப்பட்டனர்.