விழுப்புரம்

திருக்கோவிலூர் அருகே டாஸ்மாக் கடையை பா.ம.க.வினர் மற்றும் கிராம மக்கள் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகே உள்ள சம்படை கிராமத்தில் டாஸ்மாக் சாராயக் கடை திறக்கப்பட்டு, இயங்கி வருகிறது.

இந்தக் கடைக்கு குடிக்க வரும் குடிகாரர்கள் போதையில் அந்த வழியாகச் செல்லும் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகளிடம் கிண்டல், கேளி, தகராறு செய்து வருகின்றனர். இதனால் அங்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் மற்றும் பா.ம.க.வினர் மக்களுக்கு இடையூறாக இயங்கும் இந்த டாஸ்மாக் சாராயக் கடையை உடனடியாக மூடவேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர்.

இருப்பினும் டாஸ்மாக் சாராயக் கடையை மூட எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் சம்படை டாஸ்மாக் சாராயக் கடையை மூடக்கோரி 23–ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பா.ம.க.வினர் ஏற்கனவே அறிவித்திருந்தனர்.

அதன்படி நேற்று காலை பா.ம.க மாவட்டத் தலைவர் மணிகண்டன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் டாஸ்மாக் சாராயக் கடை முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்டச் செயலாளர் பால.சக்தி, கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் வடிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை பொது செயலாளர் காசாம்பு பூமாலை கலந்து கொண்டு டாஸ்மாக் சாராயக் கடையை மூட வலியுறுத்தி கண்டன உரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து பா.ம.க.வினர் மற்றும் கிராம மக்கள் சிலர் டாஸ்மாக் சாராயக் கடையை முற்றுகையிட்டனர். சாராயக் கடை மீது பெண்கள் கல் எறிந்து கோபத்தை வெளிப்படுத்தினர்.

இதுபற்றி தகவலறிந்த திருக்கோவிலூர் துணை காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார், மணலூர்பேட்டை உதவி ஆய்வாளர் சிவச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது காவலாளர்கள் கூறியது: “வருகிற 26–ஆம் தேதி கோட்டாட்சியர் தலைமையில் சமாதான கூட்டம் நடத்தி டாஸ்மாக் சாராயக் கடையை மூடுவது குறித்துப் பேசிக் கொள்ளலாம்” என்றனர்.

இதனை ஏற்ற கிராம மக்கள், பா.ம.க.வினர் அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.

அப்போது வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் குமரகுருபரன், ஒன்றிய செயலாளர்கள் அமுல்ராஜ், ரமேஷ், ராம்குமார், சூர்யா, நிர்வாகிகள் பழனி, சுப்பிரமணி, ஜெயராமன், கிருஷ்ணமூர்த்தி, ஏழுமலை, முருகன், சரவணன், தனஞ்செயன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.