செப்., 24 முதல் நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயில் சேவை?
திருநெல்வேலி சென்னை இடையே வந்தே பாரத் ரயில் சேவையை காணொலி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
வந்தே பாரத் ரயில்கள் நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது மொத்தம் 25 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, புதிய ரயில் வழித்தடங்களில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை தொடங்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.
அதன்படி, மொத்தம் 9 புதிய வழித்தடங்களில் புதிய வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில், இந்த 9 வழித்தடங்களில் வருகிற 24ஆம் தேதி வந்தே பாரத் ரயில் சேவையை காணொலி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், திருநெல்வேலி சென்னை இடையேயான வந்தே பாரத் ரயிலும் உள்ளாதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தூர் - ஜெய்ப்பூர், ஜெய்ப்பூர் - உதய்பூர், பூரி - ரூர்கேலா, பாட்னா - ஹௌரா, ஜெய்ப்பூர் - சண்டிகர் ஆகிய 5 வழித்தடங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தெற்கு ரயில்வேக்கான வழித்தடங்கள் இறுதி செய்யப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை, சென்னை - மைசூரு, சென்னை - கோவை ஆகிய இரண்டு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. அந்த வகையில், தென் தமிழ்நாட்டை இணைக்கும் சென்னை - திருநெல்வேலி இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை பெரிதும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ளது.
தந்தை பெரியார் சிலை அவமதிப்பு: ராமதாஸ் கண்டனம்!
சென்னை - திருநெல்வேலி இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலானது, திருச்சி - மதுரை ரயில் நிலையங்களில் நின்று செல்லும். வழக்கமாக நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை சென்றடைய 10 மணி நேரம் 10 நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறது. தற்போது வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டால் 8 மணி நேரத்திற்குள் சென்றடையும். வந்தே பாரத் ரயிலில் ஏசி சேர் கார், எக்கனாமிக் சேர் கார் ஆகிய 2 வகுப்புகள் உள்ளன. இந்த ரயிலில் ஒரே நேரத்தில் மொத்தம் 552 பயணிகள் பயணிக்க முடியும் என தகவல் வெளியாகியுள்ளது.