பிரதமர் மோடியின் திருப்பூர் வருகை தள்ளி வைப்பு!
பிரதமர் மோடியின் திருப்பூர் வருகை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட பாஜகவினர் தெரிவித்துள்ளனர்
பிரதமர் மோடி கடந்த 2ஆம் தேதி தமிழ்நாடு வருகை புரிந்தார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக விழாவில் கலந்து கொண்ட அவர், திருச்சியில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ரூ. 19,850 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து, இத்துறைகளில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
அதன் தொடர்ச்சியாக, பிரதமர் மோடி வருகிற 19ஆம் தேதி மீண்டும் தமிழ்நாடு வரவுள்ளார். நடப்பாண்டுக்கான கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் ஜனவரி 19ஆம் தேதி தொடங்கி 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடிக்கு தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளார்.
அதனையேற்று, வருகிற 19ஆம் தேதி தமிழக வரும் பிரதமர் மோடி திருப்பூருக்கு செல்ல திட்டமிடப்பட்டிருந்தது, திருப்பூரில் புதிதாக இ.எஸ்.ஐ., மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையை திறந்து வைக்கும் பிரதமர் மோடி அங்கு பாஜக பொதுக்கூட்டத்தில் பேச உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மாலத்தீவு பயணத்தை ரத்து செய்யும் இந்தியர்கள்: இதுதான் காரணம்!
இந்த நிலையில், பிரதமர் மோடியின் திருப்பூர் வருகை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட பாஜகவினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து திருப்பூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில் வேல் கூறுகையில், “திருப்பூரில் வரும் 19ஆம் தேதி பாஜக சார்பில் பொதுக் கூட்டம் நடைபற உள்ளதாகவும், இதில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக 6 இடங்கைளத் தேர்வு செய்யும் பணி நடைபற்று வந்தது. இந்நிலையில், சில நிர்வாகக் காரணங்களால் பிரதமர் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரதமர் பங்கேற்க உள்ள பொதுக்கூட்டம் தொடர்பான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.” என்றர்.