நீலகிரி

ஊட்டியில், பள்ளியில் பெயர் குறித்து கிண்டல் செய்ததால் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவன் காட்டுப் பகுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம், ஊட்டி காந்தல் முக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் வசந்தகுமார். இவர் ஊட்டியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் வேலை செய்கிறார். இவரது மகன் சுமித் கிரி பைரவன் (17). இவர் ஊட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வ் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று காலை சுமித் பள்ளிக்குச் செல்வதாக வீட்டில் சொல்லிவிட்டு சென்றார். ஆனால் அவர் பள்ளிக்குச் செல்லவில்லையாம். இதுகுறித்து தகவல் அறிந்த பெற்றோர், சுமித்தை ஊட்டியில் உள்ள பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர்.

அப்போது சிலர் ஊட்டி படகு இல்லம் அருகே உள்ள காட்டுப் பகுதிக்கு சுமித் சென்றதாக கூறியதையடுத்து அப்பகுதியில் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தேடிப் பார்த்தனர். அப்போது அங்குள்ள ஒரு மரத்தில் தூக்கில் சுமித்தின் உடல் தொங்கிக் கொண்டிருந்தது. அதனைப் பார்த்த அவர்கள் அதிர்ச்சியடைந்து கதறி அழுதனர்.

இதுபற்றித் தகவலறிந்த ஊட்டி நகர மேற்கு பிரிவு காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். சுமித்தை பள்ளியில் படித்து வரும் சக மாணவர்கள், அவரது பெயர் குறித்துக் கிண்டல் செய்ததால் மன உளைச்சல் அடைந்த சுமித் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

காவலாளர்கள் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து ஊட்டி நகர மேற்கு பிரிவு காவல் ஆய்வாளர் லாரன்ஸ் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.