தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட நெகிழி பொருட்களை பயன்படுத்தினால் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் மசோதாவை சட்டப்பேரவையில் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்தார். மேலும் தொடர்ந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் வணிக உரிமை ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் 14 வகையான நெகிழி பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அரசு அதிகாரிகள் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்கள் பயன்படுத்துகிறார்களா என்பது குறித்து அதிரடி சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அதிகாரிகள் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு அபராதமும் விதித்துவந்தனர். 

இந்நிலையில் தடை செய்யப்பட்ட 14 வகை நெகிழி பொருட்களை பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்கும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதன்படி தமிழகத்தில் தடை செய்யப்பட நெகிழி பொருட்களை பயன்படுத்தினால் ரூ.1 லட்சம் வரை அபராதம் வசூலிக்க வகை செய்யும் சட்ட முன்வடிவு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. 

இதன்படி முதல்முறை ரூ.25,000, 2-வது முறை 50 ஆயிரம் ரூபாயும், 3-வது முறை ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து பயன்படுத்தினால் வணிக உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.