Asianet News TamilAsianet News Tamil

தமிழக கடற்கரையை அதானி போன்ற பெரும் முதலாளிகளுக்கு தாரை வார்க்க திட்டம் - எச்சரிக்கும் எம்.எச்.ஜவாஹிருல்லா...

Planning for the big employers like Adani - Tamil Nadu coastline - warns MH Jawahrullah ...
Planning for the big employers like Adani - Tamil Nadu coastline - warns MH Jawahrullah ...
Author
First Published Feb 12, 2018, 8:08 AM IST


தஞ்சாவூர்

மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ள சாகர் மாலா திட்டத்தால் ஒட்டுமொத்த தமிழகத்தின் கடற்கரைப் பகுதிகள், துறைமுகங்கள், நீர் வழிகள் ஆகியவற்றை அதானி போன்ற பெரும் முதலாளிகளுக்கு தாரை வார்க்கப்படும்  என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

மனிதநேய மக்கள் கட்சியின் பத்தாம் ஆண்டு தொடக்கத்தையொட்டி, சாகர் மாலா திட்டத்தை கைவிட வலியுறுத்தியும், முத்தலாக் தடை சட்டத்தை எதிர்த்தும் சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டுள்ளது மனிதநேய மக்கள் கட்சி.

அந்தக் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா  இந்த பிரச்சாரத்திற்கு தலைமைத் தாங்கியுள்ளார். இந்த பிரச்சாரக் குழுவினர் நேற்று காலை தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் வந்தனர்.

அப்போது, தமுமுக - மமக அதிரைப் பேரூர் அலுவலகத்தில் மௌலான அபுல்கலாம் ஆஸாத் படிப்பகத்தை அவர் திறந்து வைத்தார். பின்னர், பயனாளி ஒருவருக்கு மருத்துவ நிதியாக ரூ. 2 ஆயிரம் மற்றும் 60 பயனாளிகளுக்கு தலா 5 கிலோ அரிசி ஆகியவற்றை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சிக்கு, தமுமுக -மமக அதிரை பேரூர் தலைவர் எம்.சாகுல் ஹமீது தலைமை தாங்கினார். மமக மாநில அமைப்புச் செயலர்கள் வழக்குரைஞர் தஞ்சை பாதுஷா, தாம்பரம் யாகூப், தமுமுக - மமக தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் அதிரை அகமது ஹாஜா, தமுமுக மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ஓ.செய்யது முகமது புஹாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மமக அதிரை பேரூர் செயலர் எஸ்.ஏ.இத்ரீஸ் அகமது, தமுமுக அதிரை பேரூர் துணைச் செயலர் எம்.ஆர். கமாலுதீன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அதிரையிலுள்ள கட்சி அலுவலகம், தக்வா பள்ளிவாசல் முக்கம், வண்டிப்பேட்டை, சேர்மன் வாடி, பேருந்து நிலையம், ஈசிஆர் சாலை, கல்லூரி முக்கம், பிலால் நகர் ஆகிய இடங்களில் மனிதநேய மக்கள் கட்சிக் கொடியை பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா ஏற்றிவைத்தார்.

அப்போது அவர் பேசியது: ""மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ள சாகர் மாலா திட்டமானது, ஒட்டுமொத்தமாக தமிழகத்தின் கடற்கரைப் பகுதிகள், துறைமுகங்கள், நீர் வழிகள் ஆகியவற்றை அதானி போன்ற பெரும் முதலாளிகளுக்கு தாரை வார்க்கும் திட்டம் ஆகும். இதனால், மீனவர்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படும். சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு மிகப் பெரிய சீர்கேட்டை ஏற்படுத்தும்.

மத்திய அரசு கொண்டுவர முயற்சிக்கும் முத்தலாக் சட்டமானது முஸ்லிம் குடும்பங்களை சிதைக்கக் கூடிய சட்டம். இது முஸ்லிம் பெண்களை பாதுகாக்க கூடிய சட்டம் என சொல்லப்படுவது உண்மையல்ல.

மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் வாக்குச்சீட்டு முறையிலையே தேர்தல் நடத்தப்பட வேண்டும்" ஆகிய மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தியே இந்ப் பிரச்சாரப் பயணம் நடைபெறுகிறது" என்று அவர் பேசினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios