Corona restrictions TN : மக்களே உஷார்.. தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு... வழிபாட்டு தலங்களுக்கு தடை..
கொரோனா தொற்று பரவல் காரணமாக இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தில் வழிபாட்டு தலங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலும், பரவி வரும் உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரசை கருத்தில் கொண்டும், பொதுமக்கள் நலன் கருதியும் அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடுகளையும், இரவு நேர ஊரடங்கையும் அறிவித்து, ஞாயிற்றுக்கிழமையில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்றும் அரசு அறிவித்திருந்தது.
மேலும் அரசு அறிவித்த கூடுதல் கட்டுப்பாடுகளில் வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவித்திருந்தது.அதன்படி கடந்த வாரம் வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டன. தமிழகத்தில் கொரோனா தினசரிபாதிப்பு என்பது அதிகரித்து வருகிறது. இதனால் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டு நடைமுறைகள் அமலில் உள்ளன.
அதன்படி வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் கூடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்கள் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டுத்தலங்களும் இன்று மூடப்படுகிறது. நேற்று முன்தினம் கோயில்கள் திறக்கப்பட்ட நிலையில் இன்று மீண்டும் கொரோனா, கட்டுப்பாட்டு நடவடிக்கையாக வழிபாடு செய்ய தடை விதிக்கப்படுகின்றன. இந்த நாட்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்று அரசு அறிவித்துள்ளது. இது பொதுமக்கள் இடையே அதிருப்தியையும், கவலையையும் உண்டாக்கி இருக்கிறது.