pilgrims pulled toad and left in road protest against police for tough in festival time

திருநெல்வேலி

திருவிழாவின்போது காவல்துறை செய்த கெடுபிடியாலும், கைது செய்யப்பட்ட 34 அடியார்களை விடுவிக்க கோரியும் பணகுடி ராமலிங்க சுவாமி கோவில் தேரை அடியார்கள் இழுத்து நடுரோட்டில் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி மாவட்டம், பணகுடி இராமலிங்க சுவாமி கோவில் தைப்பூச தேரோட்டத் திருவிழா கடந்த 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்த விழா நாள்களில் நாள்தோறும் ஒவ்வொரு சமுதாயத்தினர் சார்பில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவது வழக்கம் இரண்டாம் திருநாளன்று இரவு 10.30 மணிக்கு மேல் திருவிழா நடத்தியது தொடர்பாக 21 பேர் மீது பணகுடி காவலாளர்கள் வழக்குப்பதிந்தனர்.

மேலும், மூன்றாம் திருநாள் விழாவை நடத்திய சமுதாயத் தலைவர்கள், கரகாட்டம், மேளக் கலைஞர்கள் உள்பட 13 பேர் மீதும் காவலாளர்கள் வழக்குப்பதிந்தனர்.

இதனைக் கண்டித்து கடந்த 24-ஆம் தேதி முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு தலைமையில் மக்கள் கோவிலில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் ஒன்பதாம் திருநாளான நேற்று காலை 10.20 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. கோவில் செயல் அலுவலர் ஜெகநாதன் மற்றும் சமுதாயத் தலைவர்கள் விசுவநாதன் ஆசிரியர், மாணிக்கம், கணேசன், வழக்குரைஞர் வெங்கடேசன், முத்து உள்பட ஏராளமான அடியார்கள் வடம் பிடித்து தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தனர்.

இரத வீதிகளில் தேர் சென்றுக் கொண்டிருந்தது. கீழ இரத வீதி, தெற்கு இரத வீதியை கடந்து 2.30 மணிக்கு மேல இரத வீதிக்கு தேர் வந்தது. சிறிது தொலைவு வந்தபோது அடியார்கள் திடீரென தேர் இழுப்பதை நிறுத்திவிட்டு, தேருக்கு முன்னே அமர்ந்தனர்.

அப்போது, 34 அடியார்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கை இரத்து செய்ய வேண்டும் என்றும், விழா நாள்களில் இந்தாண்டுபோல இனி எப்போதும் காவல்துறை கெடுபிடி செய்யக் கூடாது என்று உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

திடிரென தேரோட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது மாலை 6 மணி அளவில் இராதாபுரம் தாசில்தார் ரவிகுமார், பணகுடி வருவாய் ஆய்வாளர் ஆவுடையப்பன் உள்ளிட்ட அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில், "மாவட்ட நிர்வாகத்திடம் பேசி வழக்கை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தாசில்தார் எழுதிக் கொடுத்த பிறகே போராட்டம் கைவிடப்பட்டது.

இதனையடுத்து மாலை 6.45 மணிக்கு மீண்டும் தேர் இழுத்துச் செல்லப்பட்டு நிலையை அடைந்தது.