தமிழகம் முழுவதும் நாளை ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுவதையொட்டி மேட்டூர் அணையில் இருந்தது 2500 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்தது. இதனால் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்ததால் அந்த அணைகளில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

மேட்டூர் அணைக்கு கடந்த மாதம் 8 -ந் தேதி முதல் தொடர்ச்சியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று 7181 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 7048 கன அடியாக இருந்தது.

அணையில் இருந்து கடந்த சில நாட்களாக குடிநீர் தேவைக்காக 500 கன அடி தண்ணீர் மட்டுமே வெளியேற்றப்பட்டு வந்ததால் அணையின் நீர்மட்டம் ஒரு நாளைக்கு ஒரு அடிக்கும் மேல் உயர்ந்து வந்தது. நேற்று 35.67 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 36.49 அடியாக உயர்ந்தது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் நாளை ஆடிப் பெருக்கு விழா கொண்டாடப்பட உள்ளதால், மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் 2500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. 

இந்த தண்ணீர்  இன்று நள்ளிரவில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படும் திருச்சி படித்துறை பகுதிக்கு  சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் ஆடிப்பெருக்கு கொண்டாடும் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்ததுள்ளனர். இத்தனை நாளும் மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லாமல் இருந்ததால்,. ஆடிப் பெருக்கு கொண்டாட முடியாமல் போகுமோ என ஏங்கித் தவித்த பக்தர்கள் தற்போது காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் உற்சாகம் அடைந்துள்ளனர்.