Asianet News TamilAsianet News Tamil

ஆட்சியரின் காலில் விழுந்து கோரிக்கை வைத்த மாற்றுத் திறனாளிகள்; அதிர்ச்சி அடைந்த ஆட்சியர் மற்றும் அலுவலர்கள்...

physically challenged people have fall on collector feet
physically challenged people have fall on collector feet
Author
First Published Feb 27, 2018, 10:44 AM IST


திருவண்ணாமலை

மாற்றுத்திறனாளியை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் ஆட்சியரின் காலில் விழுந்து கோரிக்கை வைத்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகா பெரணமல்லூரை அடுத்த அரியபாடி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயன். இவர் பார்வையற்ற மாற்றுத்திறனாளி.

இவருடன் சில பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் நேற்று திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்திற்கு வந்தனர்.

அவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் நுழைவுவாயில் முன்பு அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, "மாற்றுத் திறனாளியான விஜயனை தாக்கிய ஊராட்சி மன்ற உதவியாளருக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் பெரணமல்லூர் ஒன்றிய ஆணையாளர், துணை ஆணையாளர், பெரணமல்லூர் காவல் ஆய்வாளார் மற்றும் உதவி ஆய்வாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று முழக்கமிட்டனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலாளர்கள், அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லும்படி பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் அங்கு வந்த ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்கள், "எங்கள் ஊராட்சியில் தகுதியான பயனாளிகளுக்கு விலையில்லா ஆடு, மாடுகள் வழங்குவது இல்லை. இதுகுறித்து தட்டி கேட்டபோது விஜயனை தாக்கிய அரியபாடி ஊராட்சி மன்ற உதவியாளர் முருகன் மற்றும் அவரது மனைவி பத்மா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெரணமல்லூர் காவல் நிலையத்தில் கடந்த ஜனவரி 26-ஆம் தேதி புகார் அளித்தோம். இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனையடுத்து 28-ஆம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் செய்தோம். அதைத்தொடர்ந்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இருப்பினும் அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதனைத் தொடர்ந்து மக்கள் குறைதீர்வு கூட்டத்திலும் புகார் மனு அளிக்கப்பட்டது. எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. அதனால் தான் நாங்கள் போராட்டம் நடத்துகிறோம். இனியாவது இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று என்று ஆட்சியரின் காலில் விழுந்து கோரினர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆட்சியர் மற்றும் அலுவலர்கள், காவலாளர்கள் அவர்களை தூக்கிவிட்டனர்.

மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு ஊராட்சி மன்ற உதவியாளர் முருகனை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் தெரிவித்தார்.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios