Asianet News TamilAsianet News Tamil

விரைவில் தூத்துக்குடி விமான நிலையத்தில் பெட்ரோல் நிரப்பும் நிலையம்; இந்தியன் ஆயில் நிறுவனம் ஆய்வு...

Petrol filling station at Thoothukudi airport soon Indian Oil Company Examining ...
Petrol filling station at Thoothukudi airport soon Indian Oil Company Examining ...
Author
First Published Jul 6, 2017, 8:52 AM IST


தூத்துக்குடி

தூத்துக்குடி விமான நிலையத்தில் விமானங்களுக்கு பெட்ரோல் நிரப்புவதற்கான நிலையம் அமைக்கப்பட உள்ளது என்றும் அதுதொடர்பாக இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் அடுத்த வாரம் நேரில் ஆய்வு செய்ய உள்ளனர் என்றும் விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி விமான நிலைய ஆலோசனைக் குழுக் கூட்டம் நேற்று நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்திற்கு குழுத் தலைவர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி எம்.பி. தலைமை வகித்தார்.

மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தார். தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன் வரவேற்றுப் பேசினார்.

இக்கூட்டத்தில் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி எம்.பி. பேசியது:

“தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டுள்ளதால் நகர வளர்ச்சிக்கு ரூ.1400 கோடி ஒதுக்கப்பட உள்ளது.

இங்கு மீன்பிடித் தொழில், உப்புத் தொழில் சிறந்து விளங்கி வருவதால் தூத்துக்குடி விமான நிலையத்தின் தேவை அதிகரித்து வருகிறது. இந்த விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும். இதற்கு மாநில அரசு நிலம் கையகப்படுத்தி வருகிறது. இந்த பணி முடிக்கப்பட்டு நிலம் ஒப்படைக்கப்பட்டு விரிவாக்கப் பணிகள் உடனடியாக தொடங்கப்பட வேண்டும்” என்று பேசினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் பேசியது:

“விமான நிலைய விரிவாக்கத்திற்கு 610 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இந்த நிலம் 15 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. 13 பிரிவுகளில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இதில் 7 பிரிவுகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மூன்று பிரிவுகளுக்கு பகுதி அளவு நிதி வந்துள்ளது. மீதமுள்ள பகுதிகளுக்கு நிலமதிப்பு தயாரித்து அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் நிலம் கையகப்படுத்தப்படும்.

விமான நிலையம் பகுதியில் பிரதான சாலையில் பயணிகள் நிழற்குடை அமைப்பது தொடர்பாக இடம் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பேசினார்.

தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன் பேசியது:

“தூத்துக்குடி விமான நிலையத்தில் விமான ஓடுதளம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் பயணிகள் வருகை மற்றும் புறப்படும் இடங்களில் குளிரூட்டப்பட்ட வசதி செய்யப்பட்டுள்ளது.

விமான நிலையம் விரிவாக்கத்தின்போது மூன்றாயிரம் மீட்டர் நீள விமான ஓடுபாதை, விமானம் பழுது நீக்கும் மையம் அமைக்கப்படவுள்ளது. வெளிச்சம் குறைந்த நேரங்களிலும் விமானங்கள் தரையிறங்குவதற்கு வசதியாக நவீன எந்திரம் நிறுவப்பட உள்ளது. இதற்கு தேவையான 72 ஏக்கர் நிலத்தை மாநில அரசு ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விரிவாக்கத்துக்கு 410 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது.

தூத்துக்குடியில் இருந்து மேலும் விமான சேவை தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி விமான நிலையத்தில் விமானங்களுக்கு பெட்ரோல் நிரப்புவதற்கான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இது தொடர்பாக இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் அடுத்த வாரம் நேரில் ஆய்வு செய்ய உள்ளனர்.

விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு விமானம் வரும் நேரத்தில் பேருந்து வசதி செய்து கொடுக்க வேண்டும்” என்று பேசினார்.

இக்கூட்டத்தில் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் பேசியது:

“தூத்துக்குடி தொழில் நகரமாக வளர்ந்துள்ளது. இதனால் விமான சேவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. பொருட்களை வாங்குவதற்கு வருபவர்கள் எளிதில் தூத்துக்குடிக்கு அழைத்து வர முடிகிறது.

மேலும், தூத்துக்குடியில் இருந்து கொழும்புக்கு விமான சேவை தொடங்க வேண்டும். புதிய விமான சேவை தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். விமான நிலையத்தில் இருந்த வாடகை கார் வசதி செய்யப்பட வேண்டும்” என்று பேசினார்.

இக்கூட்டத்தில் தூத்துக்குடி விமான நிலைய துணை இயக்குனர் கார்த்திகேயன், மேலாளர் ஜெயராமன், விமான நிலைய போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரி சைனிமோல் ஜார்ஜ், என்ஜினீயர் கஸ்தூரி, தூத்துக்குடி உதவி ஆட்சியர் தீபக்ஜேக்கப், தூத்துக்குடி புறநகர் காவல் கண்காணிப்பாளர் சீமைச்சாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios