Petrol Diesel Gas price hike back Indian Communist Party Struggle ...

திருப்பூர்

பெட்ரோல், டீசல், எரிவாயு விலையை உடனே திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து இந்தியா முழுவதும் உள்ள அரசியல் கட்சியினர், சமூக நல அமைப்பினர் பல்வேறு ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். 

அதன்படி, திருப்பூர் கருவம்பாளையம் கிளை இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் வெடத்தலங்காடு பகுதியில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்திற்கு அக்கட்சியின் கிளை செயலாளர் திருமூர்த்தி தலைமை வகித்தார். மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் காளியப்பன், மாவட்ட செயலாளர் ரவி ஆகியோர் பங்கேற்றனர். 

இந்தப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள், "பெட்ரோல், டீசல் வாகனங்கள் ஓட்டுவதை விடுத்து மாட்டுவண்டியில்தான் பயணம் செய்ய வேண்டும்" என்பதை குறிக்கும் வகையில், இருசக்கர வாகனத்தை மாட்டு வண்டியில் ஏற்றிக்கொண்டு வந்திருந்தனர்.

மேலும், எரிவாயு விலை எட்டாத உயரத்தில் இருக்கிறது என்பதை குறிக்கு வகையில், உயரமான பகுதியில் எரிவாயு சிலிண்டரை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதில், "மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும், உடனடியாக பெட்ரோல், டீசல், எரிவாயு விலையை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் "மாநகராட்சி பகுதிகளில் உள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும்" என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.