petrol bunk strike vapaus
தமிழகத்தில் பெட்ரோல் பங்குகள் வரும் 12-ந்தேதி வழக்கம்போல் திறந்திருக்கும் என்று பெட்ரோல்-டீசல் விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தின் அடிப்படையில், பெட்ரோல்-டீசல் விலையை 15 நாட்களுக்கு ஒரு முறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வந்தன.
இதையடுத்து பெட்ரோல்-டீசல் விலையை நாள்தோறும் மாற்றியமைக்கும் முறை கடந்த மாதம் 15 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு நாளும் ஏறி, இறங்கும் விலைக்கு ஏற்ப தற்போது பெட்ரோல்-டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நாள்தோறும் பெட்ரோல்-டீசல் விலையை நிர்ணயம் செய்வதால் தங்களுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படுவதாக கூறி ஜூலை 12-ந் தேதி நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்போவதாகவும், அகில இந்திய பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இந்தநிலையில், அகில இந்திய பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ள போராட்டத்தில் தமிழ்நாடு பெட்ரோல்-டீசல் விற்பனையாளர்கள் சங்கம் பங்கேற்கப்போவதில்லை என்றும், அன்று தமிழகத்தில் பெட்ரோல் பங்குகள் வழக்கம்போல் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல்-டீசல் விற்பனையாளர்களின் கோரிக்கைகளை, மத்திய அமைச்சர் ஏற்றுக்கொள்ளும் சூழல் இருப்பதாக எண்ணெய் நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளதால் இந்த வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
