கன்னியாகுமரி

உதவித்தொகை கேட்டு மாற்றுத் திறனாளி ஒருவர் அவசர ஊர்தியில் வந்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தார்.

கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்ப்பட்டணத்தைச் சேர்ந்தவர் சாதிக் உசேன் (41). இவர் அவசர ஊர்தி மூலம் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று வந்தார்.

ஆட்சியர் மனுக்களைப் பெறும் லூயி பிரெய்லி கூட்டரங்கிற்கு முன்பாக ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி இருந்தார். அப்போது அங்கு வந்த ஆட்சியரிடம் தன்னிடமிருந்த மனுவை அளித்தார்.

அப்போது அவர் கூறியது:

“நான் சென்னையில் காய்கனிக் கடையில் வேலைசெய்து வந்தேன். மதுரையில் பேருந்து விபத்தில் சிக்கியதில் ஒரு கையை இழந்ததுடன், படுத்த படுக்கையாக உள்ளேன்.  

முன்னர் குமரி மாவட்ட ஆட்சியராக  நாகராஜன்   இருந்தபோது எனக்கு மாதம் ரூ. 2 ஆயிரம் உதவித்தொகை கிடைத்தது.

சுமார் ஆறு மாதம் மட்டுமே அந்த உதவித்தொகையும் கிடைத்தது. அதன்பிறகு கிடைக்கவில்லை.

எனது தாயுடன் வசித்துவரும் எனக்கு வேறு ஆதரவு இல்லை. எனவே எனக்கு உதவித்தொகை வழங்க வேண்டும்” என்று கூறினார்.

அவரிடம் இருந்து மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.